சென்னை: சென்னை போரூரில் முதல்வர் விஜய்க்குச் சொந்தமான நிலத்தில் மூன்று திரையரங்குகளுடன் கூடிய ஆறு மாடி வணிக வளாகம் கட்ட சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
போரூர் ஆற்காடு சாலையில் வணிக வளாகம் கட்ட அனுமதி கோரி, முதல்வர் விஜய் சார்பில் அவரது பொது அதிகார முகவர் வெங்கட்ராமன் கடந்த 2025 ஜூலை மாதம் விண்ணப்பித்தார். 2025 ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் அவரிடம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியது.
பல்வேறு துறைகளின் தடையின்மைச் சான்றிதழ்கள் கிடைப்பதில் தாமதம் நிலவியதால் இத்திட்டத்தில் முன்னேற்றமின்றி இருந்தது.
பின்னர், பிற துறைகளின் சான்றிதழ்கள் கிடைக்கப்பெற்றதோடு, சாலை விரிவாக்கத்திற்காக 1,691 சதுர அடி நிலமும் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இவ்விண்ணப்பத்தை ஏற்று பெருநகர் வளர்ச்சிக் குழுமம் திட்ட அனுமதி கடிதத்தை வெங்கட்ராமனுக்கு அனுப்பியுள்ளது.
கண்காய்வாளராகச் செயல்பட்டு வந்த அவர், தற்போது உணவுத்துறை அமைச்சராக உள்ளார்.
அதன்படி, ஆற்காடு சாலையில் விஜய்க்குச் சொந்தமான 33,949 சதுர அடி நிலத்தில், மூன்று அடித்தளங்களுடன் கூடிய ஆறு தளங்கள் கொண்ட பெரும் வணிக வளாகம் அமையவுள்ளது.
அதில் முதல் மூன்று தளங்களில் கடைகளும், நான்காவது தளத்தில் உணவகம், பொழுதுபோக்கு மையமும் அமையவுள்ளன. ஐந்து, ஆறாவது தளங்களில் மூன்று திரையரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
சென்னையில் பழைய திரையரங்குகள் இடிக்கப்பட்டுத் திருமண மண்டபங்களாகவும் பின்னர் அவை இடிக்கப்பட்டு அடுக்குமாடி வணிக வளாகங்களாகவும் கட்டப்பட்டு வரும் சூழலில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
போரூரில் தனித்தனி கடைகள், திரையரங்குகள் இருந்தாலும் பெரிய வணிக வளாகம் இல்லை. வடபழனி, விருகம்பாக்கம், அண்ணா நகர் வணிக வளாகங்ளுக்குச் செல்ல போக்குவரத்து நெரிசலில் ஐந்து முதல் 10 கி.மீ தூரம் செல்ல அரை மணி நேரத்திற்கு மேல் பயணிக்க வேண்டியுள்ளது. எனவே, அப்பகுதியில் முதல்வர் விஜய் கட்டும் வணிக வளாகம் மக்களுக்குப் பயனளித்து முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
