சென்னை: துபாய்க்குச் செல்லவிருந்த எமிரேட்ஸ் நிறுவன விமானத்தில் இருந்து திடீரென வெளிவந்த புகையால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
புகையைக் கண்டு பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 9.30 மணியளவில், 280 பயணிகளுடன் துபாய் புறப்படத் தயாராக இருந்தது எமிரேட்ஸ் விமானம்.
புறப்பாடுக்கு முன்பான அனைத்து நடைமுறைகளும் முடிவுக்கு வந்த நிலையில், திடீரென அந்த விமானத்தில் இருந்து புகை வரத்தொடங்கியது.
இதைக் கண்டு விமானப் பணியாளர்களும் பயணிகளும் மிரண்டு போயினர்.
விமானிகள் உடனடியாக விமானத்தின் இயக்கத்தை நிறுத்திய நிலையில், விமான நிலைய தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து புகையைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து புகை வருவதற்கு என்ன காரணம் என்பது கண்டறியப்பட்டு, அக்கோளாறு சரிசெய்யப்பட்ட பிறகு விமானம் புறப்படும் என எமிரேட்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இல்லையெனில், மாற்று ஏற்பாடு மூலம் பயணிகள் துபாய்க்கு அனுப்பி வைக்கப்படுவர் என்றும் கூறினர்.