தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர்-சென்னை விமானங்களில் கடத்தப்பட்ட 20 கிலோ தங்கம் பறிமுதல்

2 mins read
பிடிபட்ட 24 கேரட் தங்கத்தின் சந்தை மதிப்பு ரூ.15 கோடி; எட்டு பெண் பயணிகள் உட்பட 25 பேர் கைது
603b02f0-bbec-4334-919f-79c8d07ef72e
எட்டு பெண் பயணிகள் உட்பட 25 பேரின் உடைமைகளில் தங்கக் கட்டிகள், தங்கப் பசைகள், தங்கச் சங்கிலிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

சென்னை: சிங்கப்பூரிலிருந்து சென்னை செல்லும் விமானங்களில் பேரளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

அதையடுத்து இந்தத் துறையைச் சேர்ந்த தனிப்படையினர் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) இரவு சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதாக தினகரன், கலைஞர் செய்திகள் உள்ளிட்ட தமிழக ஊடகங்கள் தெரிவித்தன.

சிங்கப்பூரிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு இரவு 11 மணியளவில் ஸ்கூட் விமானம் சென்றுசேர்ந்தது. அந்த விமானப் பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதையடுத்து நள்ளிரவில் சிங்கப்பூரிலிருந்து சென்னை சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகளிடமும் திங்கட்கிழமை (நவம்பர் 11) அதிகாலை சிங்கப்பூரிலிருந்து சென்னை சென்ற இண்டிகோ பயணிகளிடமும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அந்த மூன்று விமானங்களிலும் சென்றவர்களில் 25 பேர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. அவர்களிடம் விசாரித்ததோடு, அவர்களின் உடைமைகளையும் அதிகாரிகள் சோதனையிட்டனர். அவர்களில் எட்டு பெண் பயணிகள் உட்பட 25 பயணிகளின் உடைமைகளில் தங்கக் கட்டிகள், தங்கப் பசைகள், தங்கச் சங்கிலிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடமிருந்து மொத்தம் 20 கிலோ சுத்தமான 24 கேரட் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் அனைத்துலகச் சந்தை மதிப்பு ரூ.15 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. பிடிபட்டவர்கள் தமிழகம், ஆந்திர மாநிலங்களின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்தது.

மேலும், சென்னையில் உள்ள முக்கியக் கடத்தல்காரர்கள் சிலர், பயணிகளைச் சிங்கப்பூருக்கு அனுப்பி, தங்கத்தைக் கடத்திவரச் சொன்னதாக தெரியவந்துள்ளது.

ஒரே விமானத்தில் வந்தால், சுங்கச் சோதனையில் தங்கம் மொத்தமாக சிக்கிவிடக்கூடும் என்பதால், அவர்களை மூன்று விமானங்களில் வரச் சொன்னதாகவும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்