சமூக ஆர்வலர் கொலைக்கு நீதி வேண்டும்: அதிமுக, தேமுதிக கடும் சினம்

சமூக ஆர்வலர் கொலைக்கு நீதி வேண்டும்: அதிமுக, தேமுதிக கடும் சினம்

2 mins read
6c0104c9-7997-44aa-91c9-db1dcb14b72f
ஜெகபர் அலி. - படம்: ஊடகம்

சென்னை: கனிமவளக் கொள்ளையை எதிர்த்து குரல் கொடுத்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொல்லப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றி விசாரணை நடத்த வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெங்களூரைச் சேர்ந்த ஜெகபர் அலி கனிமவளக் கொள்ளைக்கு எதிராகப் போராடியதற்காகக் கொலை செய்யப்பட்டார்.

“இருசக்கர வாகனம் மீது மினி லாரி மோதிய விபத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலரும் சட்டவிரோதக் கல்குவாரிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து போராடியவருமான ஜெகபர் அலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

“கனிமவளக் கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதாரங்களுடன் பலமுறை மனு கொடுத்தவர் அவர்.

“திமுக ஆட்சியில் இதுபோன்ற கொலைகள் நடப்பது சர்வசாதாரணமாகிவிட்டது. இது மிகவும் கண்டனத்திற்குரியது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி விசாரணை செய்ய வேண்டும்,” என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து உள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூக ஆர்வலர் ஜெகபர் அலியின் மரணத்துக்கு நீதி வேண்டும்.

“கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் அவரது மரணத்துக்கு பொறுப்பு. உரிய விசாரணை நடத்தி, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என வலியுறுத்தியுள்ளார்.

கைதான நால்வருக்கு 15 நாள் காவல்

கடந்த வெள்ளியன்று, பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு திரும்பியபோது வாகனம் மோதி ஜெகபர் அலி உயிரிழந்தார். அதையடுத்து, தமது கணவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததாகவும் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் ஜெகபர் அலியின் மனைவி மரியம், காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து ராசு, ராமையா, லாரி உரிமையாளர் முருகானந்தம், அவரது ஓட்டுநர் முருகேசன் ஆகியோர்மீது திருமயம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நால்வரையும் கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர்கள் 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்