தமிழகத்தில் முதன்முறையாக ரயிலில் பெண்களைப் பாதுகாக்க சமூக ஊடகக் குழு

1 mins read
c583f253-4587-48fb-a828-6550cba751ae
ரயிலில் பெண் பயணிகளுக்கான பாதுகாப்புக் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம் சென்னை வேப்பேரியில் நடைபெற்றது.  - படம்: தமிழக ஊடகம்

சென்னை: ரயில்களில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்புக்காக ரயில்வே காவல்துறை புதிய ‘வாட்ஸ்அப்’ குழுவை ஏற்படுத்தி உள்ளது.

இதனை ரயில்வே காவல்துறை டிஜிபி வன்னிய பெருமாள் தெரிவித்துள்ளார். இந்தக் குழுவில் பதிவு செய்யப்படும் புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் பள்ளியில் ரயில் பெண் பயணிகளின் பாதுகாப்புக் குழு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில், ரயில்வே காவல்துறை டிஜிபி வன்னிய பெருமாள், எஸ்.பி. ஈஸ்வரன் மற்றும் காவல்துறை, குழு உறுப்பினர்கள் என 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் வன்னிய பெருமாள் கூறுகையில், “ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

“அதில் ஒரு பகுதியாக, தமிழகத்தில் முதல் முறையாக ரயில் பெண் பயணிகள் பாதுகாப்பு என்ற ‘வாட்ஸ் அப்’ குழு தொடங்கப்பட்டு, அதில் ரயில்களில் பயணம் செய்யும் பெண்களின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது.

“இந்த வாட்ஸ் அப் குழுவில், பெண் பயணிகள் மட்டுமின்றி தமிழகம் முழுதும் உள்ள அந்தந்த ரயில்வே காவல்நிலையங்களைச் சேர்ந்த பெண் காவலர்களும் இடம் பெற்றுள்ளனர்.

“ரயில் பயணத்தின்போது பெண் பயணிகளுக்கு ஏற்படும் தொந்தரவுகளை குழுவில் பதிவிட்டால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்