சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசாங்கக் கட்டடங்களில் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டத்தை தமிழக மின்வாரியம் தொடங்கியுள்ளது.
அதையொட்டி, மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள், ஆட்சியர் அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள், அரசுப் பள்ளிகள், கல்லூரிகளின் மேற்கூரைகளில் சூரிய மின்தகடுகள் (சோலார் பேனல்) பொருத்துவது உள்ளிட்ட பணிகளில் பசுமை எரிசக்திக் கழகம் ஈடுபட்டு வருகிறது.
சூரிய மின்சக்தி உற்பத்தி விரைவில் தொடங்கும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், அரசுத் துறைகளின் மின்கட்டணச் சுமை கணிசமாகக் குறைவதுடன், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடும் ஊக்குவிக்கப்படும்.
மேற்கூரை சூரிய மின்சக்தித் திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகக் கட்டடங்களின் மேற்கூரையில் சூரிய மின்தகடுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது
உற்பத்தியாகும் மின்சாரத்தில், அலுவலகத்துக்கான பயன்பாடு போக மீதமுள்ள மின்சாரத்தை மின்வாரியம் கொள்முதல் செய்யும் என்று அதிகாரிகள் கூறினர்.
இந்தத் திட்டத்தில் மருத்துவமனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. பணிகளை விரைவில் முடித்து மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

