சோமாஸ்கந்தர் சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு

1 mins read
fbb19fa9-708f-4031-b199-e6ba5eb79439
எட்டு கோடி ரூபாய் மதிப்புள்ள சோமாஸ்கந்தர் உலோகச் சிலை. - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலைச் சேர்ந்த எட்டு கோடி ரூபாய் மதிப்புள்ள சோமாஸ்கந்தர் உலோகச்சிலை, அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டு மாநில சிலை திருட்டு தடுப்புப் பிரிவுக் காவல்துறை ஐ.ஜி தினகரன் தலைமையில், வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள் மற்றும் பழங்காலக் கலைப் பொருள்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இணையத்தளங்களை ஆய்வு செய்த போது, காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான சோமாஸ்கந்தர் உலோகச்சிலை, அமெரிக்காவுக்குக் கடத்தப்பட்டு இருப்பதை காவல்துறை ஆய்வாளர் தமிழ்செல்வி கண்டறிந்தார்.

இந்தச் சிலையின் பீடத்தில், நான்கு வரியில் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டு இருப்பது பற்றி கல்வெட்டு வல்லுநர்கள் உதவியுடன் ஆய்வு செய்தபோது ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு இச்சிலையை தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த வெங்கட்ராமநாயனி பரிசாக வழங்கி இருப்பதை உறுதி செய்தனர்.

தற்போது சோமாஸ்கந்தர் சிலை அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ ஆசிய கலை அருங்காட்சியகத்தில் உள்ளது. இதன் சந்தை மதிப்பு 8 கோடி ரூபாய்.

இச்சிலை கடத்தல் தொடர்பாக, மாநில சிலை திருட்டு தடுப்புப் பிரிவுக் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட சிலை விரைந்து மீட்கப்படும். மற்ற சிலைகள் குறித்தும் விசாரணை நடைபெறுகிறது என்று தமிழ்நாட்டு மாநில சிலை திருட்டுத் தடுப்புப் பிரிவு எஸ்.பி., சிவகுமார் கூறினார்.

குறிப்புச் சொற்கள்