சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக 121 இடங்களில் நேரடி மோதல்

சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக 121 இடங்களில் நேரடி மோதல்

2 mins read
4cf35e79-d42a-4fc8-8a87-fa9aa258d442
மருத்துவர் கோகிலாமணி. - படம்: தினத்தந்தி
Google News Preferred Icon

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் இம்முறை திமுகவும் அதிமுகவும் 121 இடங்களில் நேரடியாக மோதுகின்றன.

எனவே, மற்றத் தொகுதிகளைக் காட்டிலும் நேரடிப் போட்டி நிலவும் தொகுதிகளில் இருதரப்பினரும் தீவிர பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.

எதிர்வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இரு முக்கியக் கூட்டணிகளுக்குத் தலைமையேற்றுள்ள திமுகவும் அதிமுகவும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.

இத்தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி என நான்முனைப் போட்டி நிலவுகிறது.

அதிகாரபூர்வ பிரசாரம் தொடங்கும் முன்பே, தேர்தல் களம் தொடர்பான பல்வேறு சுவாரசியமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இம்முறை தேர்தலில் திமுக 164 தொகுதிகளிலும் அதிமுக 168 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

பாஜக, காங்கிரஸ் மோதும் தொகுதிகள்

தேசிய கட்சிகளான பாஜகவும் காங்கிரசும் மூன்று தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன.

விளவங்கோடு, ஊட்டி, குளச்சல் ஆகிய மூன்று தொகுதிகளிலும் ஏற்கெனவே இரு தரப்பினரும் தேர்தல் பிரசாரப் பணிகளை மறைமுகமாகத் தொடங்கிவிட்டனர்.

காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள கிள்ளியூர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜகவின் ‘தாமரை’ சின்னத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. எனவே, நான்கு தொகுதிகளில் காங்கிரசின் ‘கை’ சின்னமும் பாஜகவின் ‘தாமரை’ சின்னமும் மோதுகின்றன.

திமுகவில் 125 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

திமுக சார்பில் 60க்கும் மேற்பட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சி போட்டியிடும் 164 தொகுதிகளில் 125 பட்டதாரிகள் களமிறங்குகின்றனர்.

இவர்களில் 15 பேர் மருத்துவர்கள், 17 பொறியாளர்கள், 29 வழக்கறிஞர்கள், ஏழு முனைவர்கள் அடங்குவர்.

மொத்தம் 18 பெண்களுக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திமுகவில் இளம் பெண் மருத்துவர்

திமுக சார்பாக அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த வெ.கோகிலாமணி, அவிநாசி தொகுதியில் போட்டியிடுகிறார். மருத்துவரான இவர் அவிநாசி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

2018ஆம் ஆண்டு திருமலைக் கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் சமைத்த மதிய உணவைப் பள்ளிக் குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது என மற்றச் சமூகத்தினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்நிலையில், அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த 28 வயது பெண் மருத்துவருக்குத் திமுக வாய்ப்பு அளித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
சட்டமன்றத் தேர்தல்திமுகபெண்கள்வேட்பாளர்மருத்துவர்பொறியாளர்வழக்கறிஞர்