விஜய்யைப் பாராட்டிய பாடல்: மன்னிப்பு கோரிய பாடகர் வேல்முருகன்

விஜய்யைப் பாராட்டிய பாடல்: மன்னிப்பு கோரிய பாடகர் வேல்முருகன்

1 mins read
02f0377f-db45-4796-bd16-d4b0407ae690
வேல்முருகன். - படம்: சமயம் தமிழ்

சென்னை: தவெக தலைவர் விஜய்யைப் புகழ்ந்து பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகர் வேல்முருகன் பாடியது சர்ச்சையாகி உள்ளது.

முருகப் பெருமான் பற்றிய பாடலைத் திரித்துப் பாடி, அவர் விஜய்யைப் புகழ்ந்துள்ளதாக பக்தர்கள் அவரை விமர்சித்துள்ளனர்.

இதையடுத்து, நடந்த சம்பவத்துக்காகத் தாம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதாக வேல்முருகன் கூறியுள்ளார்.

தவெக மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் வேல்முருகன் கலந்துகொண்டு பாடியுள்ளார்.

‘மருதமலை மாமணியே முருகையா’ என்ற பக்திப் பாடலைத் திரித்து, விஜய் பெயரை அதில் சேர்த்து வேல்முருகன் பாடியது தவெக தொண்டர்களை உற்சாகப்படுத்தியது. அக்கட்சித் தலைவர் விஜய்யும் பாடகர் வேல்முருகனுக்கு சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார்.

இந்நிலையில், முருகன் பாடலை இழிவுபடுத்திய வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து சமய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். மேலும், வேல்முருகனைத் தூண்டியதாகக் குறிப்பிட்டு, தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தான் யார் மனத்தையேனும் புண்படுத்தி இருந்தால் அதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதாகவும் முருகப் பெருமானை அவமதித்தது தம்மைத் தாமே கத்தியால் குத்திக்கொள்வதற்கு சமம் என்றும் வேல்முருகன் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்