தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சினிமாவால் தென்னிந்திய மொழிகள் துடிப்புடன் இருக்கின்றன: உதயநிதி ஸ்டாலின்

2 mins read
4b3f1db2-5b36-43e3-93b5-513c85a238e3
கேரளாவில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின். - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

திருவனந்தபுரம்: தென்னிந்திய திரையுலகம் வட்டார மொழிகளில் துடிப்புடன் செயல்படுகிறது என்று தமிழ்நாட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

வட இந்தியாவில் இந்திக்கு வழி விட்டதால் அங்கு வட்டார மொழிகள் தேய்ந்துவிட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

“இந்தியாவில் பிராந்திய மொழி சினிமாக்களின் நிலையை உற்று நோக்குங்கள்,” என்றார் அவர்.

கேரள மாநிலத்தில் கோழிக்கோட்டில் நடைபெற்ற மலையாள மனோரமா இலக்கிய கலாசார நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.

“வட இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு வட்டார மொழி சினிமாவாவது தென்னிந்திய திரையுலகை போன்று துடிப்பாக இயங்கி வருகிறதா? நிச்சயம் இல்லை. பெரும்பாலும், வட இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிகளும் இந்திக்கு வழிவிட்டுள்ளன,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மொழி அடையாளத்தை பாதுகாப்பதில் சினிமாவின் பங்கு என்ன என்பதை விளக்கிய உதயநிதி ஸ்டாலின், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட சினிமாக்கள் எவ்வாறு சுதந்திரமாகவும், துடிப்பாகவும் இயங்குகிறது என்பதை சுட்டிக்காட்டினார்.

வட இந்திய சினிமாக்களில் இந்தி படங்கள் மட்டுமே கவனத்தைப் பெறுவதாகக் கூறிய அவர். பொழுதுபோக்கையும் கடந்து சினிமாவுக்கு மிகுந்த ஆற்றல் இருப்பதாக சொன்னார்.

அரசியல் பிரவேசத்திற்கு பிறகு கேரளாவில் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றிய முதல் நிகழ்ச்சி இது என்று த இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

திராவிட இயக்கத்தின் தோற்றம், மொழி மற்றும் கலாசார அடையாளத்தை தக்க வைப்பதற்கான போராட்டங்கள் குறித்தும் உதயநிதி பேசினார்

குறிப்பாக, இந்தியின் ஆதிக்கத்தை திராவிட இயக்கங்கள் தடுத்ததாக குறிப்பிட்ட அவர், வட இந்தியாவில் மற்ற மொழிகளின் மீது இந்தி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதாகவும் கூறினார்.

“மும்பையில் இந்தி திரைப்படங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருகின்றன. மராத்தி, போஜ்புரி, பீகாரி, குஜராத்தி உள்ளிட்ட மொழி படங்களை அவர்கள் தயாரிப்பதே இல்லை. இவை அனைத்தும் பாலிவுட்டில் குறைவான கவனத்தையே பெறுகின்றன.

“நமது மொழியை பாதுகாக்க தவறிவிட்டால், நம்முடைய கலாசார அடையாளத்தை இந்தி ஆக்கிரமித்து விடும். இவற்றை தடுப்பதற்காக தான் இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டதே தவிர, இந்தியின் மீது வெறுப்பு ஏற்பட்டு அதை எதிர்க்கவில்லை,” என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்