இந்திய உள்நாட்டு உற்பத்தியில் தென் மாநிலங்களின் பங்கு 30%: விஜய்

இந்திய உள்நாட்டு உற்பத்தியில் தென் மாநிலங்களின் பங்கு 30%: விஜய்

2 mins read
a3040141-987f-4fce-a036-865a18996814
மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். - படம்: விகடன்
multi-img1 of 3
Google News Preferred Icon

சென்னை: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தென் மாநிலங்களின் பங்கு 30 விழுக்காட்டுக்கும் அதிகம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் 31வது தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு சென்னை, கோவலம் பகுதியில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மாநாட்டில் பேசிய திரு விஜய், வசதியில்லாத, கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளித்து, 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

வரி விகிதங்களைத் தீர்மானிக்கும் நெகிழ்வுத்தன்மையை மாநிலங்கள் மீண்டும் பெறவேண்டும் என்றும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதற்காகத் தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைக்கப்படக்கூடாது என்றும் திரு விஜய் குறிப்பிட்டார். இதுதொடர்பாக, மத்திய அரசு சட்டபூர்வ உறுதி அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பெங்களூரு மெட்ரோ ரயில் சேவையை ஓசூர் வரை நீட்டிப்பதுடன், போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க மாநிலங்களுக்கு இடையே கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று முதல்வர் விஜய் வலியுறுத்தினார்.

முக்கியமாக, காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் மேலாண்மை ஆணைய முடிவுகளையும் சொல் மாறாமல் செயல்படுத்த வேண்டும் என்றும் முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தண்ணீர் என்பது மாநிலங்களைப் பிரிக்காமல் ஒன்றுசேர்க்க வேண்டும், நதிநீர் விவகாரங்களை அரசியல் எல்லைகளைக் கடந்து வலுவான ஒத்துழைப்புடன் அணுக வேண்டும் என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்தார்.

மேகதாது திட்டம் கர்நாடகாவிற்கு மட்டுமன்றி தமிழ்நாடு, புதுச்சேரி விவசாயிகளுக்கும் பயனளிக்கும் முக்கியத் திட்டம் என அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், தென் மாநில முதல்வர்கள் மாநாட்டை புதுவை முதல்வர் ரங்கசாமி புறக்கணித்துள்ளார்.

மாநில உரிமையை நிலை நாட்டவே முதல்வர் ரங்கசாமி மாநாட்டைப் புறக்கணித்ததாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்