பாரம்பரியத் தமிழ் அறிவையும் விளையாட்டுகளையும் மீட்டெடுக்க சிறப்பு மையம்

பாரம்பரியத் தமிழ் அறிவையும் விளையாட்டுகளையும் மீட்டெடுக்க சிறப்பு மையம்

1 mins read
7e6290af-5366-4028-905a-b987c761a19b
ஆடுபுலி ஆட்டம் நினைவாற்றலை வளர்க்கும் என்று உளவியல் இணைப் பேராசிரியர் யு. விஜயபானு தெரிவித்துள்ளார். - படம்: ஒன் இந்தியா
Google News Preferred Icon

சென்னை: பாரம்பரியத் தமிழ் அறிவையும் விளையாட்டுகளையும் மீட்டெடுக்கும் நோக்கத்துடன் சிறப்பு மையம் ஒன்றை ‘விஐடி சென்னை’ கல்வி நிலையம் அமைத்துள்ளது.

பல்லாங்குழி, தாயக்கட்டம், ஆடுபுலி ஆட்டம், பரமபதம், ஐந்து கல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளும், திருக்குறள் மற்றும் திருமந்திரத்தின் சில போதனைகளும் மனிதனின் கவனிக்கும் திறன், நினைவாற்றல், சிக்கல்களுக்குத் தீர்வு காணும் திறன், காட்சி-இடம் சார்ந்த பகுப்பாய்வுத் திறன் (visuo-spatial ability), மனக் கட்டுப்பாடு ஆகியவற்றில் ஏற்படுத்தும் தாக்கத்தை அறிவியல் அடிப்படையில் ஆராய அந்த மையம் நிறுவப்பட்டுள்ளது.

மத்தியக் கல்வி அமைச்சின் இந்திய அறிவு அமைப்புப் பிரிவின்கீழ் அம்மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ‘தி இந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐந்து கல் விளையாட்டு காட்சி-இடம் சார்ந்த பகுப்பாய்வுத் திறனையும், பல்லாங்குழி மேலாண்மைச் சிந்தனையையும், தாயக்கட்டம் முடிவெடுக்கும் திறன் மற்றும் உத்தி சார்ந்த சிந்தனையையும், ஆடுபுலி ஆட்டம் நினைவாற்றலையும், பரமபதம் வாழ்க்கைச் சவால்களை எதிர்கொள்ளும் திறனையும் வளர்க்கும் என்று உளவியல் இணைப் பேராசிரியரும் இணை முதன்மை ஆய்வாளருமான திருவாட்டி யு. விஜயபானு விளக்கினார்.

பழங்காலப் பழக்கவழக்கங்கள் பாரம்பரியமானவை என்பதால் மட்டுமே பயனளிக்கின்றன என்று எடுத்துக்கொள்ளாமல், அவற்றின் விளைவுகளை அளவிடக்கூடிய அறிவியல் அளவுகோல்கள்மூலம் சோதிக்கவிருப்பதாகக் கணினிப் பொறியியல் துறைத் தலைவரும் முதன்மை ஆய்வாளருமான திரு என்.கணேஷ் கூறினார்.

பாரம்பரிய நடைமுறைகளை இளைய தலைமுறையினரின் வாழ்க்கையில் மீண்டும் கொண்டுசேர்ப்பதே அம்மையத்தின் முதன்மை நோக்கம் என விஐடி துணைத் தலைவர் ஜி.வி. செல்வம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்