சென்னை: தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் வணிக அடிப்படையிலான சிறப்பு ஆளில்லா வானூர்தி வழித்தடங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வழித்தடங்களில் காவல்துறையின் முன்னனுமதியின்றிப் பொருள்களை விநியோகித்தல், வேளாண் நிலங்களில் உரம், பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல், கட்டுமானப் பணிகளைக் கண்காணித்தல், பேரிடர் மேலாண்மை ஆகிய நடவடிக்கைகளைத் தடையின்றி மேற்கொள்ளலாம்.
தமிழக அரசின் உயர்கல்வித் துறை தொலைநோக்கு ஆவணத்தில் இத்திட்டம் இடம்பெற்றுள்ளதாக ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆளில்லா வானூர்திகளின் வணிகப் பயன்பாட்டை விரிவுபடுத்துவதும் உள்நாட்டுத் தயாரிப்புகளுக்குச் சந்தை வாய்ப்பை உருவாக்குவதுமே இதன் முக்கிய நோக்கம்.
தொழில்துறையின்கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் (டிட்கோ) ஆதரவுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று உயர்கல்வித் துறைச் செயலாளர் தீரஜ் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், காவல்துறைக் கண்காணிப்பு, வேளாண் தேவைகளுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதிய வழித்தடங்கள் ஆளில்லா வானூர்தித் தயாரிப்பு, அதுசார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்குப் புதிய வணிக வாய்ப்புகளைத் திறந்துவிடும் என்று அண்ணா பல்கலைக்கழக விண்வெளி ஆய்வு மையப் பொறுப்பு இயக்குநர் கே. செந்தில்குமார் குறிப்பிட்டார்.
6,000 பேருக்குப் பயிற்சி
தமிழ்நாட்டில் ஏற்கெனவே இத்திட்டத்திற்கு ஏற்ற கட்டமைப்பு இருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் மெட்ராஸ் தொழில்நுட்பக் கழக வளாகத்தில் செயல்படும் பயிற்சி நிலையத்தில் இதுவரை கிட்டத்தட்ட 6,000 பேர்க்கு ஆளில்லா வானூர்தியை இயக்குவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வித் துறையின்கீழ் இயங்கும் மாநில ஆளில்லா வானூர்திக் கழகமும் பல்வேறு துறைகளில் அவற்றின் பயன்பாட்டைப் பரவலாக்கி வருகிறது.
இதற்கிடையே, ஆளில்லா வானூர்தித் தொழில்நுட்பத்தையும் சோதனைத் திறன்களையும் வலுப்படுத்தும் மற்றொரு முக்கிய நடவடிக்கையாக, கானாடுகாத்தானில் உள்ள செட்டிநாடு வானூர்தி நிலையத்தில் சோதனைகளைத் தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் தயாராகி வருகிறது. அதற்குத் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.
ஓட்டுநரின் நேரடிப் பார்வைக்கு அப்பால் பறக்கும் ஆளில்லா வானூர்திகளைத் தகவல் தொடர்பு, திசைகாட்டி, கண்காணிப்பு அமைப்புகள் வழியாக இயக்குவதில் அச்சோதனை கவனம் செலுத்தும்.
“உள்நாட்டுப் புதிய தொழில் நிறுவனங்கள் மாதிரி வடிவமைப்புகளைத் தாண்டி வணிகப் பயன்பாடுகளை ஆராய புதிய வழித்தடங்கள் உதவும்,” என்று திரு செந்தில்குமார் கூறினார்.
