சென்னை: ஹரியாணாவில் அனுபவம் வாய்ந்த கொள்ளையர்கள், ஏடிஎம் இயந்திரத்தை உடைப்பது, சிசிடிவி கேமராவை செயலிழக்கச் செய்வதுபோன்றவை குறித்து புதியவர்களுக்குப் பாடம் எடுப்பதை தமிழக காவல்துறை கண்டுபிடித்துள்ளது.
சென்னையிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கடந்த ஒரு சில மாதங்களில் மட்டும் ஏராளமான ஏடிஎம் கொள்ளைச் சம்பவங்கள் நடந்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் வடமாநிலங்களைச் சேர்ந்த சிலரைக் கைது செய்து விசாரணையை நடத்தியதில் இது தெரியவந்தது.
ஆகஸ்ட் மாதத்திலிருந்து செப்டம்பர் வரை ஏடிஎம் இயந்திரத்தை வெட்டி பணத்தை கொள்ளையடித்த பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கிட்டத்தட்ட ரூ.32 லட்சம்வரை கொள்ளையடிக்கப்பட்டது.
ஹரியானாவின் நுஹ், பல்வால், மேவத் போன்ற பகுதிகளில் ஏடிஎம் கொள்ளையர்களுக்கான பள்ளிகளை தமிழ்நாடு காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
அங்கு அனுபவம் வாய்ந்த கொள்ளையர்கள், பழைய ஏடிஎம் இயந்திரங்களை வைத்து புதியவர்களுக்குச் சொல்லித் தந்துள்ளனர்.
வெற்றுத் தாள்களை பணம் போல அதில் வைத்து, இயந்திரத்தை உடைக்கக் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு விரைவாக இந்த வேலையைச் செய்கிறார்கள் என்று தேர்வும் நடத்தப்பட்டு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் நன்கு தேறியவர்களின் தலைமையில் நான்கு அல்லது ஐந்து பேர் கொண்ட குழுக்கள் உருவாக்கப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
வங்கிகள், பழைய ஏடிஎம்களை இரும்புச் சாமான் கடைகளுக்கு போடும்போது, அவற்றை அக்கும்பல் வாங்கியுள்ளது. சிலவற்றை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தும் பாடம் கற்றுக் கொடுக்க பயன்படுத்தியிருக்கிறார்கள்.
கொள்ளையடிக்கும் பணம் கிராமத்துக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. எனவே, அவர்களுக்கு அங்கிருக்கும் கிராமத்தினர் முழு ஆதரவு கொடுப்பதால் கிராமத்துக்குள் நுழைவதும், சிரமமாகவே உள்ளது. காவல்துறை சீருடை இல்லாமல் சாமானியர்கள்போல நுழைந்தே விசாரணை நடத்தும் நிலை உள்ளது என்றும் கூறப்படுகிறது.
