சென்னை: ஃபெங்கல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலின் வேகம் அதிகரித்துள்ளது. முன்னதாக மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்த புயல், தற்போது 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதால் மழை, காற்றின் வேகமும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சென்னை தாம்பரம் அரசு மருத்துவமனை, குரோம்பேட்டை நெஞ்சக மருத்துவமனைக்குள் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
ஃபெஞ்சல் புயல் காரணமாகப் பெய்து வரும் கனமழையால் குரோம்பேட்டை மருத்துவமனையின் வளாகத்திலும் அங்குள்ள சாலைகளிலும் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கீழ்த்தளத்தில் இருந்த நோயாளிகள் முதல் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். அதே சமயம் மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மழைநீரை வெளியேற்றுவதிலும் சிரமம் நீடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

