திருச்சி: அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) பொதுச் செயலாளரான இ.பி.எஸ் என்றழைக்கப்படும் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னைத் தாக்கிப் பேசியதற்குப் பதிலடி தந்துள்ளார்.
விருதுநகரில் நடந்த விழாவில் திரு ஸ்டாலின், “பொய் சொல்லலாம். பழனிசாமி அளவுக்கு பொய் சொல்லக்கூடாது,” என்று கூறியிருந்தார்.
அதற்குப் பதிலளித்த திரு பழனிசாமி, “நான் முதல்வராக இருந்தபோது நிறைவேற்றிய திட்டங்களைப் பற்றி புள்ளி விவரங்களுடன் துண்டுச்சீட்டு இல்லாமல் பேசுகிறேன். ஸ்டாலினும் கடந்த 3 ஆண்டு ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்களைப் பற்றி பேசத் தயாரா?
“அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக, ‘அம்மா மினி கிளினிக்’ மருந்தகத் திட்டத்தை முடக்கி ரத்து செய்துவிட்டனர். மடிக்கணினி திட்டத்தை ரத்து செய்துவிட்டனர். டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு இப்போது உரம் தேவை. அது முழுமையாகக் கிடைக்கவில்லை. திறமையற்ற அரசு நடந்துகொண்டிருக்கிறது,” என்று சாடினார்.
ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க), 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு வெளியிட்ட அறிவிப்புகளில் குறிப்பிடப்பட்ட திட்டங்களில் 10 விழுக்காட்டுத் திட்டங்கள்கூட நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார்.