சென்னை: ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் தமக்கு வழங்கப்பட்ட பழங்கால ஓலைச்சுவடிகளை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளை நூலகத்துக்கு வழங்கியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அண்மையில் தமிழகத்துக்கான அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து, ஜெர்மனிக்குப் பயணம் மேற்கொண்ட அவர், கொலோன் பல்கலைக்கழகத்துக்குச் சென்று அங்குள்ள தமிழ்த்துறை நூலகத்தை நேரில் பார்வையிட்டார்.
அப்போது தமிழ்த்துறையால் அவருக்கு பல பழங்கால ஓலைச்சுவடிகள் வழங்கப்பட்டன.
இது தொடர்பாக தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள திரு ஸ்டாலின், பழந்தமிழ் இலக்கியச் சுவடிகள், பல முதற்பதிப்புகள் என 40,000 அரிய தமிழ் நூல்களைக் கொண்ட கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைத் தாம் பார்வையிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“ஐரோப்பாவில் தமிழியல் ஆய்வுகளுக்கான முக்கிய மையமான கொலோன் தமிழ்த்துறை மூடப்படுவதைத் தடுக்க, ஆட்சிக்கு வந்ததுமே ரூ.1.25 கோடியை வழங்கியது தமிழக அரசு.
“சென்னை, மதுரையைத் தொடர்ந்து கோவை, திருச்சியிலும் மாபெரும் நூலகங்களை அனைவருக்குமான அறிவு மையங்களாக அமைத்து வரும் நமது முயற்சிகளுக்கு நல்லூக்கமாக இந்த கொலோன் பல்கலைக்கழக நூலகப் பயணம் அமைந்தது,” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

