சென்னை: தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆகியோர் தாக்கல் செய்துள்ள சொத்துப் பட்டியல் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஸ்டாலினின் கையிருப்பில் உள்ள ரொக்கம் மிகக் குறைவாக உள்ள நிலையில், விஜய்யின் சொத்து மதிப்பு பல நூறு கோடிகளை எட்டியுள்ளது.
ஸ்டாலினிடம் கார், நகை இல்லை
கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் ஸ்டாலின் திங்கட்கிழமை (மார்ச் 30) தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அவர் அளித்துள்ள பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்களில், தன்னிடம் ரூ.10,000 பணமும் தனது மனைவி துர்கா ஸ்டாலினிடம் ரூ.40,000 மட்டுமே ரொக்கமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆண்டு வருமானம்: கடந்த நிதியாண்டில் ஸ்டாலினுக்கு ரூ.30.59 லட்சமும், துர்கா ஸ்டாலினுக்கு ரூ.5.33 லட்சமும் வருமானம் கிடைத்துள்ளது.
சொத்து: ஸ்டாலின் பெயரில் ரூ.3.30 கோடி, துர்கா ஸ்டாலின் பெயரில் ரூ.1.32 கோடி என மொத்தம் ரூ.4.62 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளன.
அசையாச் சொத்து: விவசாய நிலம், வீடுகள் என மொத்தம் ரூ.5.07 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் இத்தம்பதியிடம் உள்ளது.
முதல்வர் பெயரில் கார் உள்ளிட்ட வாகனங்களோ அல்லது தங்க நகைகளோ இல்லை. துர்கா ஸ்டாலினிடம் 720 கிராம் தங்கம் உள்ளது. இருவர் பெயரிலும் கடன்கள் அல்லது குற்ற வழக்குகள் ஏதுமில்லை.
குடும்பத்தார்க்குக் கடன் கொடுத்துள்ள விஜய்
பெரம்பூர் தொகுதியில் களம் காணும் நடிகர் விஜய், தனது வேட்புமனுவில் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அசையும் சொத்து: ரூ.404.58 கோடி (வங்கி சேமிப்பு, முதலீடு)
அசையா சொத்து: ரூ.115.13 கோடி (நிலம், கட்டடங்கள்)
நகை: 883 கிராம் தங்கம்; மனைவி பெயரில் 135 கேரட் வைரம்
வாகனம்: பிஎம்டபிள்யூ, லெக்சஸ், வோல்வோ, டொயோட்டா வெல்ஃபயர் உட்பட பல வாகனங்கள் உள்ளன.
விஜய்யின் பெயரில் கடன் ஏதுமில்லை. ஆனால், அவர் தமது குடும்பத்தினர், நண்பர்களுக்குக் கடன் கொடுத்துள்ளார்.
தந்தை சந்திரசேகருக்கு ரூ.3.02 கோடி, மனைவி சங்கீதாவுக்கு ரூ.12.60 கோடி கடன் வழங்கியுள்ளார்.
கட்சி நிர்வாகி புஸ்ஸி ஆனந்துக்கு ரூ.3 கோடி கடனாக அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் நீண்டகாலமாக இருந்துவரும் முதல்வர் ஸ்டாலினின் சொத்து மதிப்பு ஏறக்குறைய ரூ.9.69 கோடியாக இருக்கும் நிலையில், திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்துள்ள விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு ரூ.519 கோடியைத் தாண்டுகிறது.

