சென்னை: தமிழ்நாடு நாள், தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள் எனத் தமிழக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமது சமூக ஊடகப் பதிவில், “ஜூலை 18, 1967, திமுக எனும் இயக்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதால் இம்மண்ணின் முகவரியின் முதல் வரியே மாற்றம் பெற்றது.
“தமிழ்நாடு என்ற நம் உண்மைப் பெயரை அதிகாரபூர்வமாகப் பெற்று, ஆண்டாண்டு காலமாய் நெஞ்சில் சுமந்த கனவு நனவான நாள்.
“அதுவரை இல்லாத சிறப்பாய்த் தாய்நிலத்துக்குத் தலைமகன் பேரறிஞர் அண்ணா பெயர்சூட்டி ‘தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு’ என மூன்று முறை பேரவையில் முழங்க, மேசையொலிகள் விண்ணதிர்ந்த இந்நாள்தான் தமிழ்நாடு நாள்,” எனத் திரு ஸ்டாலின் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, திமுகவின் உறுப்பினர் சேர்ப்பு நடவடிக்கையின்போது திமுகவினர் ஒவ்வொரு வீட்டிலும் 10 நிமிடங்களாவது பேச வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார் திமுக தலைவருமான ஸ்டாலின்.
காணொளி மூலம் கட்சியினரிடையே பேசிய அவர், திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
“தமிழக மக்களை ஓரணியில் கொண்டு வர, வீடு வீடாகப் பிரசாரம் செய்ய வேண்டும். பொது மக்களையும் இளைய தலைமுறையினரையும் திமுகவில் புதிய உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும்.
பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தமிழகத்திற்கு இழைத்துள்ள, இழைக்கவுள்ள அநீதியை, ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் எடுத்துச் சொல்வதுதான் இந்த முன்னெடுப்பின் நோக்கம்.
தொடர்புடைய செய்திகள்
“அடுத்த 30 நாள்களில், தமிழகத்தில் மொத்தமுள்ள 68,000 வாக்குச்சாவடிகளிலும் சேர்த்து, இரண்டரை கோடிப் பேரை திமுக உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும்,” என இலக்கு நிர்ணயித்தார் முதல்வர் ஸ்டாலின்.