சென்னை: சட்டமன்றத் தேர்தலில் தாம் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்த போதிலும், அத்தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தேர்தலில் தோல்வியுற்றாலும், வாக்களித்த மக்களுக்கு நேரடியாகச் சென்று நன்றி தெரிவிக்கும் கடமையை திமுக எப்போதும் செய்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
கொளத்தூரில் திறந்த வாகனத்தில் சென்ற ஸ்டாலின், சாலையில் இருபக்கமும் கூடியிருந்த திமுக தொண்டர்களுக்கும் பொது மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
அப்போது ஏராளமான இளைஞர்கள், பெண்கள் கண்ணீருடன் அவரை வரவேற்றனர். இதைக்கண்ட ஸ்டாலின், தொண்டர்களிடம் அழவேண்டாம் எனக் கூறினார்.
மக்கள் சந்திப்புக்குப் பின்னர் தமது சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், கொளத்தூருக்கும் தமக்குமான உறவு தேர்தல் வெற்றி, தோல்விகளைக் கடந்தது என்றும் கடந்த 15 ஆண்டுகாலம் தமக்கு ஆதரவு நல்கியவர்கள் கொளத்தூர் தொகுதி மக்கள் என்று குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின்.
“தமிழகத்தின் மாடல் தொகுதியாக அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து, எந்தக் கோரிக்கையானாலும் நிறைவேற்றிக் கொடுத்த பெருமிதத்தோடு மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன்,” என்று ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

