சென்னை: அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து, முதல்வர் ஸ்டாலின் வீடு திரும்பினார்.
சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டின் முன்புறம் ஏராளமான திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனிடையே, முதல்வர் ஸ்டாலினுக்கு அரசு மருத்துவமனைக்குப் பதிலாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
உயர் பொறுப்புகளில் இருப்போர் அரசு மருத்துவமனைகளுக்கு போகும்போது அவர்களுக்கான பாதுகாப்பு போன்றவற்றால், அங்கு வரும் பொதுமக்களுக்கான சேவை பாதிக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதால்தான், முதல்வர் ஸ்டாலின் போன்றோர் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்கின்றனர் என்றும் தனியார்-அரசு மருத்துவமனை எனப் பிரித்துப் பார்க்கக்கூடாது என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், அரசு மருத்துவமனை மிகச் சிறப்பாக இருப்பதால்தான், 2021க்கு பின், நோயாளிகளின் வருகை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு மருத்துவமனைகள் வளர்ச்சி பெற்றுள்ளதாக திமுக அரசு கூறிவரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் ஏன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியிருந்தார்.
அவருக்குப் பதிலளித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழிசை ஏற்கெனவே இரண்டு மாநிலங்களுக்கு ஆளுநராக இருந்துள்ளார். அப்போது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தால், அவர் எங்கே போயிருப்பார் என்பது ஊருக்குத் தெரியும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.