தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் பெரியார் படத்தைத் திறந்துவைக்கும் ஸ்டாலின்

2 mins read
d65e1c40-7fd0-4dfe-8e11-98a024551fdc
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: தந்தை பெரியாரின் கருத்துகள் உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், ‘ஆக்ஸ்ஃபோர்டு’ பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவப் படம் திறக்கப்பட உள்ளதாகவும் அதனைத் திறந்து வைப்பதில் தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டார்.

தமிழகத்துக்குப் புதிய முதலீடுகளை ஈட்டும் விதமாக, முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்துக்கு சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) பயணம் மேற்கொள்கிறார்.

இந்நிலையில், திருமண நிகழ்வில் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகத்துக்கு ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

“தமிழ்ச்சமூகம் சுயமரியாதையுடன் தலைநிமிர்ந்து நடைபோடுவதற்குக் காரணம் பெரியார். அவரது சிந்தனையை உலகு தொழும் காட்சியை நாம் இந்தப் பயணத்தில் பார்க்கப்போகிறோம்.

“உலகின் மிகப்பெரிய அறிஞர்களைத் தந்த, புகழ்மிக்க அறிவுசார் நிறுவனமாகப் போற்றப்படும் ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில், தந்தை பெரியார் அவர்களின் திருவுருவப்படம் திறக்கப்பட உள்ளது,” என்றார் திரு ஸ்டாலின்.

தந்தை பெரியார் உலக அளவில் அங்கீகரிக்கப்படுவது தமிழ்நாட்டுக்குப் பெருமை எனக் குறிப்பிட்ட அவர், பெரியார் தமிழ்நாட்டில் பிறந்து, தமிழில் பேசி, எழுதியிருந்தாலும், அவருடைய சிந்தனைகள் இந்த உலகத்திற்கானது; அனைவருக்கும் பொதுவானது,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டையொட்டி, உலகப்புகழ் பெற்ற ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில், செப்டம்பர் 4ஆம் தேதி நடைபெறும் கருத்தரங்கில் பெரியாரின் உருவப்படத்தினைத் திறந்து வைக்க இருப்பதாக திரு ஸ்டாலின் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

‘ஆதிக்கம்தான் என் எதிரி’ என முழங்கிச் சாதியாலும் பாலினத்தாலும் ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காகச் சுற்றிச் சுழன்று பரப்புரை செய்த தந்தை பெரியார் உலகம் முழுமைக்குமானவர், ‘பெரியாரியம் உலகத்தவர் அனைவருக்கும்’ என்றும் தமது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்