சென்னை: தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) தொடங்கியது.
கொளத்தூரில் போட்டியிடுவதற்காகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சமர்ப்பித்த வேட்புமனுவும் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதற்காக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அதேபோன்று, காரைக்குடித் தொகுதியில் போட்டியிடும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வேட்புமனுவும் எடப்பாடியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் மனுவும் ஏற்கப்பட்டன.
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் ஸ்டாலின், விஜய், சீமான் உள்ளிட்டோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அதன்பின்னர், நான்கு நாள்கள் தொடர்ந்து பொது விடுமுறை என்பதால் மனு தாக்கல் எதுவும் நடைபெறவில்லை.
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 6ஆம் தேதி கடைசி நாள் என்பதால், அனைத்துத் தொகுதிகளிலும் காலை முதலே மனு தாக்கல் களைகட்டியது.
எடப்பாடியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, விருத்தாசலத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 7ஆம் தேதி நடந்த நிலையில், கொளத்தூரில் மு.க.ஸ்டாலின், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் போட்டியிடும் துணை முதல்வர் உதயநிதி, சாத்தூரில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தருமபுரியில் செளமியா அன்புமணி, காரைக்குடியில் சீமான், பெரம்பூரிலும் திருச்சி கிழக்கிலும் போட்டியிடும் விஜய் ஆகியோரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய மனைவியின் சொத்துவிவரம் குறித்த சந்தேகங்களால் நிறுத்திவைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
தியாகராய நகரில், தவெக வேட்பாளர் என்.ஆனந்த் வேட்புமனு ஏற்கப்பட்டது.

