ஸ்டாலின், விஜய், சீமான் வேட்புமனு ஏற்பு; ஆதவ் அர்ஜுனா மனு நிறுத்திவைப்பு

ஸ்டாலின், விஜய், சீமான் வேட்புமனு ஏற்பு; ஆதவ் அர்ஜுனா மனு நிறுத்திவைப்பு

2 mins read
a20ddb9c-eec9-4d33-b888-9891fd758178
(இடமிருந்து) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆகியோரின் மனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டன. - படங்கள்: இந்து தமிழ் திசை

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) தொடங்கியது.

கொளத்தூரில் போட்டியிடுவதற்காகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சமர்ப்பித்த வேட்புமனுவும் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதற்காகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அதேபோன்று, காரைக்குடித் தொகுதியில் போட்டியிடும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வேட்புமனுவும்  எடப்பாடியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் மனுவும் ஏற்கப்பட்டன.

தமிழகச் சட்​டமற்னத் தேர்​தல் 234 தொகு​தி​களி​லும் ஒரே கட்​ட​மாக ஏப்​ரல் 23ஆம் தேதி நடை​பெறவுள்​ளது.

அதற்​கான வேட்​புமனுத் தாக்​கல் மார்ச் 30ஆம் தேதி தொடங்​கியது. ​முதல் நாளில் ஸ்டா​லின், விஜய், சீமான் உள்​ளிட்​டோர் வேட்​புமனுக்​களை தாக்​கல் செய்​தனர். அதன்​பின்​னர், நான்கு நாள்கள் தொடர்ந்து பொது விடு​முறை என்பதால் மனு தாக்​கல் எதுவும் நடை​பெற​வில்​லை. 

வேட்​புமனு தாக்​கல் செய்ய ஏப்ரல் 6ஆம் தேதி கடைசி நாள் என்​ப​தால், அனைத்துத் தொகு​தி​களி​லும் காலை முதலே மனுத் தாக்கல் களை​கட்​டியது.

எடப்​பாடி​யில் அதிமுக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, விருத்​தாசலத்​தில் தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் ஆகியோர் வேட்புமனுக்​களைத் தாக்​கல் செய்​தனர்.

இந்நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 7ஆம் தேதி நடந்த நிலையில், கொளத்தூரில் மு.க.ஸ்டாலின், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் போட்டியிடும் துணை முதல்வர் உதயநிதி, சாத்​தூரில் தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், தருமபுரியில் செளமியா அன்புமணி, காரைக்குடியில் சீமான், பெரம்பூரிலும் திருச்சி கிழக்கிலும் போட்டியிடும் விஜய் ஆகியோரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய மனைவியின் சொத்துவிவரம் குறித்த சந்தேகங்களால் நிறுத்திவைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

தியாகராய நகரில், தவெக வேட்பாளர் என்.ஆனந்தின் வேட்புமனு ஏற்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்