நெல்லை மாவட்டத்தில் தோற்றால் பதவி பறிக்கப்படும்: ஸ்டாலின் எச்சரிக்கை

2 mins read
fcffae53-bef3-4fd2-979f-e909c25b9d10
‘உடன் பிறப்பே வா’ எனும் சந்திப்புக் கூட்டத்தில் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திமுக மாவட்ட நிர்வாகிகளை நேருக்கு நேர் சந்தித்துப் பேசி, தேர்தல் தொகுதி கள நிலவரம் பற்றிக் கேட்டறிந்தார். - படம்: ஊடகம்

சென்னை: தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள், தேர்தல் வியூகங்கள் வகுக்கும் கட்சித் தலைவர்கள் நிர்வாகிகளைச் சந்திக்கும் கூட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை, சென்னை அறிவாலயத்தில் ‘உடன் பிறப்பே வா’ என்று பெயரிடப்பட்ட சந்திப்புக் கூட்டத்தில் நிர்வாகிகளை நேருக்கு நேர் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசினார். அப்போது, தொகுதி குறித்த செயல்பாடு, கள நிலவரம் உள்ளிட்டவற்றைக் கேட்டுத் தெரிந்துகொண்டார் எனக் கூறப்படுகிறது.

அந்த வகையில், நெல்லை, சங்கரன்கோவில் ஆகிய தொகுதிகளின் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்தார். அதில் தெற்கு மண்டல பொறுப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியும் பங்கேற்றார். அப்போது தொகுதி நிர்வாகிகளிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நெல்லை மாவட்டத் தொகுதிகளில் வெற்றி பெறாவிட்டால் நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களின் பதவிகள் பறிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது.

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் உள்ள குழப்பங்களால் ஏராளமான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படக் கூடிய ஆபத்து உள்ளது, எனவே, வாக்காளர்களின் விவரங்களைச் சேகரிக்கும் பணிகளுக்கு திமுகவினர் மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவர் நிர்வாகிகளிடம் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

மேலும், கட்சியின் அடிமட்டத் தொண்டர்களை அதட்டி வேலை வாங்காமல் தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள் எனவும் நிர்வாகிகளிடம் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

குறிப்புச் சொற்கள்