ராகுல் பங்கேற்காத பிரசாரம்: ஸ்டாலின் வருத்தம்

ராகுல் பங்கேற்காத பிரசாரம்: ஸ்டாலின் வருத்தம்

2 mins read
4c3fdeab-bf5b-49df-80e4-cce7e5e4d34c
ராகுல் காந்தி. - கோப்புப் படம்: தினமணி

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தில் அனல் பறக்கும் பிரசாரம் நடந்துவரும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்னும் தனது பிரசாரத்தைத் தொடங்கவில்லை.

இதனால் அக்கட்சி போட்டியிடும் 28 தொகுதிகளின் வேட்பாளர்கள், காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமின்றி, கூட்டணிக் கட்சியினரும் கடும் குழப்பத்திலும் வருத்தத்திலும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

திமுக கூட்டணிக்கு தலைமை ஏற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதேபோல் திமுகவின் மூத்த தலைவர்களும் நிர்வாகிகளும் பிரசாரம் செய்துவருகின்றனர்.

காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர், ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வந்து பிரசாரம் மேற்கொள்வார் என்று தெரிவித்திருந்தார். ஆனால், ராகுல் இன்னும் வரவில்லை என்பது மட்டுமல்ல, இனிமேலாவது வருவாரா என்பது தெரியவில்லை.

பிரசாரம் முடிவடைய இன்னும் ஒரு வாரம்கூட இல்லாத நிலையில், காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் யாரும் பிரசாரத்தில் பங்கேற்காதது திமுக தலைவர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த முறையைவிட தற்போது கூடுதலாக மூன்று தொகுதிகளைப் பெற்று தேர்தலில் களமிறங்கியுள்ளது காங்கிரஸ். எனவே, ராகுல், பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் பிரசாரம் மேற்கொண்டால் அது வலுசேர்க்கும் என காங்கிரசார் நம்புகின்றனர்.

ஏப்ரல் 16 முதல் 18ஆம் தேதி வரை நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இக்கூட்டத் தொடரில் ராகுல் பங்கேற்பது அவசியம் என்பதால் அவரால் தமிழகத்துக்கு வர இயலாது.

அதன் பின்னர், பிரசாரம் மேற்கொள்வதாக இருந்தால் 19, 20,21 ஆகிய மூன்று நாள்கள் மட்டுமே உள்ளன.

காங்கிரஸ் வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவது, அதிமுக, பாஜகவுக்குச் சாதகமாக அமையும். இந்தக் கள நிலவரம் தெரிந்திருந்தும், ராகுல் காந்தி தமிழக காங்கிரசை மட்டுமல்லாமல், திமுக தலைமையையும் ஒருசேரப் புறக்கணித்திருப்பது முதல்வர் ஸ்டாலினுக்கு வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் தந்திருப்பதாகத் தமிழ ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்