ஸ்டாலின் வேண்டுகோள்: பரிசீலிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

ஸ்டாலின் வேண்டுகோள்: பரிசீலிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

2 mins read
79929b0a-2fea-453e-8e60-f9c2a8206bb0
முதல்வர் ஸ்டாலின், பெ. சண்முகம். - படங்கள்: ஒன் இந்தியா

சென்னை: திமுக கூட்டணியில் அதிகமான கட்சிகள் இடம்பெற்றிருப்பதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் மட்டுமே ஒதுக்க இயலும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியதாக பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) காலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொகுதிகள் ஒதுக்குவதில் சிரமம் இருப்பதால் தமது வேண்டுகோளை மார்க்சிஸ்ட் ஏற்க வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து, கட்சியின் மாநிலக்குழு கூடி விவாதித்துப் பதில் சொல்வதாக முதல்வரிடம் கூறியதாக பெ.சண்முகம் கூறினார்.

இம்முறை இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திமுக தலைமையிடம் வலியுறுத்தி வருகிறது. ஆனால் ஐந்து இடங்களை மட்டுமே ஒதுக்க முடியும் எனத் திமுக திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

“மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணியில் சிபிஎம் தொடந்து பயணித்து வருகிறது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக கூட்டணியில் நீடிப்போம். இதுகுறித்து திமுக தலைமையிலான பேச்சுவார்த்தைக் குழுவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

“ஏற்கெனவே போட்டியிட்ட ஆறு தொகுதிகள் என்ற எண்ணிக்கையைவிட கூடுதலாக தொகுதிகளை வலியுறுத்த வேண்டாம் என்றும் ஆறு தொகுதிகளில் உடன்பாடு செய்யலாம் என்றும் எங்கள் மாநிலக்குழு தெரிவித்தது. அதற்கான முயற்சிகளை எடுக்க மாநிலக்குழு எங்களை அறிவுறுத்தியது,” என்றார் பெ.சண்முகம்.

ஐந்து தொகுதிகள் என்ற எண்ணிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் சாதகமான பதிலைச் சொல்ல வேண்டும் எனவும் முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்