போட்டிபோட்டு பெண்களுக்கு நிதியளிக்கும் மாநிலங்கள்

அனைத்துலக மகளிர் தினத்தில் பெண்களுக்கு நிதி உதவிகளை அறிவித்த புதுவை, ஒடிசா, அசாம், பஞ்சாப்

போட்டிபோட்டு பெண்களுக்கு நிதியளிக்கும் மாநிலங்கள்

3 mins read
9dda988a-479d-4e0a-a57f-34ef20944ba7
மாதருக்கு மாதந்தோறும் நிதியளிக்கும் மகளிர் உரிமைத் திட்டத்தை 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு தொடங்கியது.  - கோப்புப் படம்: நியூஸ்18

புதுடெல்லி: வாக்காளர்களை, குறிப்பாகப் பெண்களைக் கவர தேர்தல்தோறும் புதுப்புது இலவசங்களையும் சலுகைகளையும் அறிவிப்பதில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது.

குறைந்த விலையில் அரிசி, பெண்களுக்கு இலவசப் பேருந்து என்று தமிழ்நாட்டின் அடிச்சுவட்டை மற்ற மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தைத் தொடர்ந்து நாட்டின் பல மாநிலங்களும் பெண்களுக்கு நிதி உதவிகளை அறிவித்துள்ளன.

புதுவை

புதுவையில் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.5,000 அளிக்கப்படும் என அம்மாநில ஆளுநர் கைலாஷ்நாதன் அறிவித்துள்ளார். 63,000 குடும்பத் தலைவிகளுக்கு அடுத்த இரு மாதங்களுக்கான மாதாந்தர நிதியுதவி ரூ.2,500 வீதம் மொத்தம் ரூ.5,000 வழங்கப்படவுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு ரூ 3000 ரொக்கம் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து புதுவையில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசு ரேஷன் கார்டுக்கு ரூ 3000 ரொக்கமும், ரூ 750 மதிப்பிலான பொங்கல் தொகுப்பும் வழங்கியது.

தேர்தல் அறிவிப்பு வெளியானால் மகளிருக்கு உரிமைத் தொகை கொடுக்க இயலாது என்பதால் மூன்று மாதத்திற்கான உரிமைத் தொகையும் கோடைக்கால நிவாரணமாக ரூ.2,000மும் ரூ.5,000 மகளிர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து புதுவையிலும் மகளிர் உரிமைத் தொகையை 2 மாதங்களுக்கு முன்பே கொடுக்க திட்டமிடப்பட்டது.

சிவப்பு ரேஷன் அட்டை வைத்திருக்கும் அதாவது, 21 வயது முதல் 55 வயதுக்குட்பட்ட வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள 65 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் ரூ1,000 ரூ.2,500ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோல் எந்த உரிமைத் தொகையும் பெறாத மஞ்சள் ரேஷன் அட்டை வைத்துள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்றும் அதன்கீழ் 1 லட்சம் இல்லத்தரசிகள் பயன்பெறுவர் என்றும் சொல்லப்பட்டது.

ஒடிசா

ஒடிசா, மகளிர் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) ‘சுபத்ரா யோஜனா’ திட்டத்தின்கீழ்1.02 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.5,000 செலுத்தியது. பூரி மாவட்டத்தில் ஞாயிறன்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அம்மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி, ‘’இத்தொகை சிறு வணிகர்களுக்கும் கலைஞர்களுக்கும் உதவும். மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதன் மூலம் மாநிலப் பொருளியல் மேம்படும்,’’ என்றார்.

அத்திட்டத்தின்கீழ் ஏற்கெனவே 21 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ஆண்டுதோறும் இரு தவணைகளாக ரூ.10,000 அளிக்கப்படுகிறது.

ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி தலைமையிலான பாஜக ஆட்சியில் கிட்டத்தட்ட 1.02 கோடிப் பெண்களுக்குத் தலா ரூ.5,000 வழங்கப்பட்டுள்ளது.
ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி தலைமையிலான பாஜக ஆட்சியில் கிட்டத்தட்ட 1.02 கோடிப் பெண்களுக்குத் தலா ரூ.5,000 வழங்கப்பட்டுள்ளது. - படம்: இடி நவ்

அசாம்

விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள அசாமில், ‘அருணோதய்’ திட்டத்தின்கீழ் கிட்டத்தட்ட 40 லட்சம் பெண்களுக்குத் தலா ரூ.9,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) காலையில் மொத்தம் ரூ.3,600 கோடி பெண்கள் தங்கள் வங்கிக் கணக்குளில் அத்தொகையைப் பெறுவர் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) அறிவித்தார்.

அத்திட்டத்தின்கீழ் ஏற்கெனவே, தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதம் ரூ.1,250 வழங்கப்படுகிறது. தேர்தலையொட்டி இத்தொகை ரூ.1,500ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய நான்கு மாதங்களுக்கான தொகையுடன் அசாமியப் புத்தாண்டுச் சிறப்பு நிதியும் சேர்த்து மொத்தம் ரூ.9,000 வழங்கப்படுகிறது.

முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பாஜக ஆட்சி நடக்கும் அசாமில் 40 லட்சம் பெண்களுக்குத் தலா ரூ.9,000 நிதியுதவி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) அறிவிக்கப்பட்டது.
முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பாஜக ஆட்சி நடக்கும் அசாமில் 40 லட்சம் பெண்களுக்குத் தலா ரூ.9,000 நிதியுதவி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) அறிவிக்கப்பட்டது. - படம்: அசாம் டிரிபியூன்

பஞ்சாப்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பஞ்சாப்பில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் மாதம் ரூ.1,000 உதவித்தொகையை அம்மாநில முதல்வர் பகவந்த் சிங் மான் ஞாயிறன்று அறிவித்தார். பட்டியலினப் பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும். இத்திட்டத்திற்காக 2026- 27ஆம் நிதியாண்டில் ரூ.9,300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆட்சிசெய்யும் ஆம் ஆத்மி கட்சி தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பெண்களுக்கான நிதியுதவித் திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) அறிவித்தது.
பஞ்சாபில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆட்சிசெய்யும் ஆம் ஆத்மி கட்சி தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பெண்களுக்கான நிதியுதவித் திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) அறிவித்தது. - படம்: குஜராத் ஃபர்ஸ்ட்
நிதியுதவித் திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) அறிவித்து உரையாற்றிய பஞ்சாப் மாநில முதல்வர்பகவந்த் சிங் மான்.
நிதியுதவித் திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) அறிவித்து உரையாற்றிய பஞ்சாப் மாநில முதல்வர்பகவந்த் சிங் மான். - படம்: குஜராத் ஃபர்ஸ்ட்

உத்தரப் பிரதேசம்

உத்தரப் பிரதேசத்தில் பெண்களின் பிறப்பு முதல் பட்டப்படிப்புவரை நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். பெண் குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்டவுடன் குழந்தையின் பிறப்புக்குத் தேவையான தொகை நேரடியாக அவரது வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும். குழந்தைக்குத் தேவையான அனைத்து தடுப்பூசிகளும் வழங்கப்படுவதை அது உறுதிசெய்யும். நிதியுதவி பட்டப்படிப்பு வரை தொடரும் என்றார் அவர்.

தற்போது, அம்மாநிலத்தில் வசதிகுறைந்த பெண்களுக்கு ரூ.1 லட்சம் திருமண நிதியுதவி உட்பட பல்வேறு பிரிவுகளின்கீழ் மொத்தம் ரூ.25,000 வழங்கப்படுகிறது. கிட்டத்தட்ட 2.7 மில்லியன் பெண்கள் பயன்பெறுகிறார்கள். மேலும், லட்சுமி பாய் ஸ்கூட்டி திட்டத்தின்கீழ், ஸ்கூட்டர்களை விநியோகிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அவர்களைத் தற்சார்பு உடையவர்களாக மாற்றும் வகையில் ‘வேலைவாய்ப்புச் சங்கமம்’ கைப்பேசிச் செயலி அறிமுகம் கண்டுள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்த வேலைவாய்ப்பு முகாமில், 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன; 5,000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலைக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன. மேலும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு நேரடி பணப்பரிமாற்றம் மூலம் ரூ.38.49 கோடியை யோகி வழங்கினார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) நடந்த விழாவில், பெண்கள் வேலை வாய்ப்புக்கு உதவும் ‘வேலைவாய்ப்புச் சங்கமம்’ என்ற கைப்பேசிச் செயலியை அறிமுகம் செய்தார்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) நடந்த விழாவில், பெண்கள் வேலை வாய்ப்புக்கு உதவும் ‘வேலைவாய்ப்புச் சங்கமம்’ என்ற கைப்பேசிச் செயலியை அறிமுகம் செய்தார். - படம்: ஃபிரீ பிரஸ் ஜர்னல்
குறிப்புச் சொற்கள்