புதுடெல்லி: இந்தியாவைச் சேர்ந்த மகரிஷி சுஷ்ருதருக்கு ஸ்காட்லாந்துத் தலைநகர் எடின்பர்க் பகுதியில் வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
இவர் அறுவை சிகிச்சையின் தந்தை எனப் போற்றப்படுபவர். உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி பகுதியில் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகக் கருதப்படுகிறார் மகரிஷி சுஷ்ருதர். இவரை மருத்துவ உலகில் அறுவை சிகிச்சையின் தந்தை எனக் குறிப்பிடுகின்றனர்.
மகரிஷி எழுதிய சுஷ்ருத சம்ஹிதா என்ற மருத்துவ நூலில் அறுவை சிகிச்சை குறித்து விரிவான விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நூலில் 1,120 வகை நோய்களுக்கான மருந்துகள் குறித்தும் விவரங்கள் உள்ளன. அவற்றுள் 700 மருத்துவ குணாதிசயம் கொண்ட தாவரங்கள், விலங்கினங்கள் குறித்தும் விவரங்களைக் காண முடியும்.
இந்நிலையில், உலகின் பழமைவாய்ந்த எடின்பர்க் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மகரிஷி சுஷ்ருதருக்குச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதை ஸ்காட்லாந்துக்கான இந்தியத் தூதர் சித்தார்த் மாலிக் திறந்து வைத்தார்.
தமிழகத்தின் திருவண்ணாமலையைச் சேர்ந்த சிற்பிகள் 90 கிலோ எடை கொண்ட மகரிஷியின் சிலையை நேர்த்தியாக வடித்துள்ளனர்.
பிரிட்டனில் வசிக்கும் ஆந்திராவைச் சேர்ந்த புகழ்பெற்ற அறுவைச் சிகிச்சை நிபுணர் சந்திரா செருவு இச்சிலையை தன் சொந்தச் செலவில் அமைத்துள்ளார்.


