சென்னை: விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்கள் மீது ‘லேசர்’ ஒளி பாய்ச்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
அண்மையில் துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 326 பயணிகள் இருந்தனர். இந்த விமானம் தரையிறங்கியபோது, திடீரென அதன் மீது லேசர் ஒளி பாய்ந்தது. இதனால் விமானிகளும் பயணிகளும் பதற்றம் அடைந்தனர்.
எனினும், விமானிகளின் சாதுரியத்தால் அந்த விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. இதையடுத்து, லேசர் ஒளி பாய்ச்சப்பட்டது தொடர்பாக விசாரணை தொடங்கியது.
சென்னை விமான நிலையமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் தீவிர பாதுகாப்பும் கண்காணிப்பும் மிகுந்த பகுதிகள்.
இதை மீறி விமானத்தின் மீது லேசர் ஒளி பாய்ச்சியது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனிடையே, கட்டுப்பாடுகள் நிறைந்த விமான நிலையப் பகுதியில் லேசர் ஒளிக்கற்றையை ஒளிரவிடக் கூடாது என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.
இந்தத் தடை உத்தரவை மீறுவோர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

