கோவை: கோயம்புத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுனன் வீட்டில் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) காலை அதிரடிச் சோதனை நடத்தியுள்ளனர்.
கோயம்புத்தூர் மாநகர, மாவட்ட அதிமுக செயலாளரான அர்ச்சுனன் 2021 தேர்தலில் கோவை வடக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
சுண்டக்காமுத்தூர் சாலை மூன்றாவது வீதி, திரு நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்த ஆவணங்களைக் கைப்பற்றிய அதிகாரிகள், அது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டு விசாரித்தனர்.
சோதனை குறித்து தகவல் அறிந்த அதிமுக கட்சி நிர்வாகிகள் அவரது வீட்டின் முன்பு குவிந்தனர். இதனால் அப்பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது.
முன்னதாகச் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுனன் மீதும், அவரது மனைவி விஜயலட்சுமி மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புக் காவல்துறை திங்கட்கிழமை (24.02.2022) வழக்குப் பதிவு செய்தது.
2016ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை வருமானத்திற்கும் அதிகமாக ரூ.2 கோடியே 75 லட்சத்து 78 ஆயிரத்து 962 ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாகக் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.