சென்னை: தமிழக வெற்றிக் கழகம் வியாழக்கிழமை, பனையூர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. அதில் பங்கேற்க வந்த அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரைக் காணவில்லை என்று தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற பெரும்பான்மை இல்லாததால் பதவியேற்க அழைப்பு விடுக்க தமிழக ஆளுநர் மறுத்து வருகிறார்.
இப்போதுள்ள சூழலைப் பயன்படுத்தி, மற்ற கட்சிகள் தவெக சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்கள் பக்கம் இழுக்க குதிரை பேரம் நடத்தக்கூடும். எனவே, இதனைத் தவிர்க்க தவெக தலைமை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களைத் தவிர்த்து, வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 80 சட்டமன்ற உறுப்பினர்களை மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பாதுகாப்பாகத் தங்கவைத்துள்ளது.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடக்கவிருந்தது. பின்னர் அக்கூட்டம் ரத்துச் செய்யப்பட்டது. கூட்டத்தில் கலந்துகொள்ள பனையூர் அலுவலகத்துக்கு வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மீண்டும் விடுதிக்கு அனுப்பப்படாமல், இரவு வரை பனையூரிலேயே தங்கவைக்கப்பட்டனர்.
இதற்கிடையே, சட்டமன்ற உறுப்பினர்களில் சிலர் காணாமல் போனதாகத் தகவல் வெளியானது. குறிப்பாக, தவெக சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்கள் பக்கம் இழுக்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாகச் செய்திகள் பரவின.
இதுகுறித்து தவெக தரப்பில் கேட்டபோது, “எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் காணாமல் போகவில்லை. பதவியேற்பு விழா தள்ளிப் போனதால், ஒருசிலர் அனுமதி பெற்று தங்களது சொந்த ஊருக்குச் சென்று வந்தனர். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சித் தலைமையின் நேரடிப் பார்வையில் பாதுகாப்பாக உள்ளனர்,” எனத் தெரிவித்தனர்.

