ராஜபாளையம் அருகே கற்கால வாழ்விடங்கள் கண்டுபிடிப்பு

ராஜபாளையம் அருகே கற்கால வாழ்விடங்கள் கண்டுபிடிப்பு

படம்: இந்து தமிழ் திசை

09 Nov 2026 - 8:35 pm

1 mins read

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள புத்தூர் மலையில் வெண்சாந்து ஓவியங்களும் கற்கால மனிதர்களின் குகை வாழ்விடங்களும் கண்டறியப்பட்டுள்ளன. அவை 3,000 ஆண்டுகளுக்கும் முற்பட்டவையாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

புத்தூர் மலையடிவாரத்தில் உள்ள கட்டில் பாறை கருப்பசாமி கோயில் பகுதியில் ஏற்கெனவே கற்காலக் குகைகள், சமணர் படுக்கைகள், கருவிகள் கண்டறியப்பட்டுத் தமிழகத் தொல்லியல் துறையால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், கிராமவாசி ராம்குமார் அளித்த தகவலின் பேரில், பேராசிரியர் பிரேம், பேராசிரியர் கந்தசாமி ஆகியோர் புதிய கள ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, கோயிலுக்கு அருகே இயற்கையாக அமைந்துள்ள மூன்று குகைகளில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்களும் வெண்சாந்துப் பாறை ஓவியங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

அக்குகைகளில் மழைநீர் கசியாத இயற்கை அமைப்பும், அரைப்பு, தேய்ப்புக் குழிகளும் உள்ளதால், அவை அக்கால மனிதர்களின் தங்குமிடங்களாகப் (புடவு) பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அதன் காரணமாகவே இப்பகுதிக்கு ‘கட்டில் பாறை’ எனப் பெயர் வந்திருக்கக்கூடும்.

குகை விதானத்தில் வெண்சாந்தால் வரையப்பட்டுள்ள ஓவியங்களில் மனிதர்களின் போர்க்காட்சிகள், விலங்குகள், வாள், கேடயம் போன்ற ஆயுதங்கள் காணப்படுகின்றன. அவை அக்கால மக்களின் வாழ்வியல், பண்பாட்டை வெளிப்படுத்தும் முக்கியத் தொல்லியல் சான்றுகளாக உள்ளன.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் குகைகளில் அடுப்பு மூட்டிச் சமைப்பதால் அந்த ஓவியங்களின் மீது கரி படிந்து அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, பாறை ஓவியங்களைப் பாதுகாக்கத் தொல்லியல் துறையும் மாவட்ட நிர்வாகமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்தினர்.

குறிப்புச் சொற்கள்