கல் குவாரி விதிமீறல்: புகாரளித்தவர் மீது தாக்குதல்

2 mins read
4017d216-7943-4974-841c-5a8c36381e7f
விதிகளை மீறி இயங்கும் கல் குவாரி குறித்துப் புகாரளித்த சமூக ஆர்வலர் ஞானசேகரன் (இடம்) கடுமையாகத் தாக்கப்பட்டதால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். - படங்கள்: புதிய தலைமுறை இணையத்தளம், ஃபேஸ்புக்

மதுரை: மதுரையில் உரிமம் இன்றிக் கல் குவாரிகள் செயல்படுவதைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அம்பலப்படுத்திய இளம் சமூக ஆர்வலர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கல் குவாரிகள் இயங்குகின்றன. இவற்றில் பல, உரிமம் காலாவதியான பிறகும் செயல்படுகின்றன.

இவ்வகையில், வாடிப்பட்டிப் பகுதியில் உரிமம் முடிந்தும் தொடர்ந்து செயல்பட்டுவரும் கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

கச்சைகட்டி, ராமையன்பட்டி, பூச்சம்பட்டிப் பகுதிகளில் 10க்கு மேற்பட்ட கல் குவாரிகள் உள்ளன. இங்குள்ள வகுத்துமலை வனப்பகுதியை ஒட்டி 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல குவாரிகள் செயல்படுகின்றன. அந்தக் குவாரிகளுக்கு வாகனங்கள் சென்றுவர தனிப்பாதைகள் இல்லாததால் நீர்வரத்து ஓடை பயன்படுத்தப்படுகிறது. இதனால் இப்பகுதியில் வேளாண்மையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில், ராமையன்பட்டிப் பகுதியில் உரிமம் முடிந்த சில குவாரிகள் பலமாதங்களாக இரவு பகலாகக் கற்களை உடைத்து ஏற்றிச் செல்வதாகவும் இதனால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதே கிராமத்தைச் சார்ந்த சமூக ஆர்வலர் ஞானசேகரன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல் பெற்றிருந்தார்.

அதுகுறித்துப் புதிய தலைமுறை செய்தி நிறுவனத்துக்கு அவர் நேர்காணல் அளித்தார்.

அதனால் ஆத்திரம் அடைந்த கல் குவாரி ஊழியர்கள் ஞானசேகரனைக் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த ஞானசேகரன் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். பின்னர் கூடுதல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்துத் தகவலறிந்த மதுரை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர், தாக்குதலில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உறுதியளித்துள்ளார்.

இவ்வேளையில், சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும் தற்போது அவர் மது போதையில் இருப்பதால் விரைவில் அவரைக் கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஞானவேல் தாக்குதல் தொடர்பில் கல் குவாரியின் லாரி ஓட்டுநர் முருகனை சனிக்கிழமை (டிசம்பர் 21) அவர்கள் கைது செய்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்