ஆணவம் வேண்டாம்: அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை

சேலம்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆணவத்தோடு பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) எச்சரித்துள்ளார்.

சேலத்தில் வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 12) நடந்த அதிமுக தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் இபிஎஸ் கலந்துகொண்டு, தமது கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது, “சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை. கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் இம்மாவட்டத்தில் பத்து இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது.

“திமுகவைப் போல அதிமுக எம்.பி.க்கள் கோழைகள் அல்லர். ஒற்றைச் செங்கலை ஊர் ஊராகச் சென்று காட்டுகிறார் உதயநிதி. நாடாளுமன்றத்தில் காட்டினால்தானே வேலை நடக்கும். நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்திருந்தால் மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வந்திருக்கும்,” என்று திமுகவை இபிஎஸ் சாடினார்.

அடுத்து, பாஜக தலைவர் அண்ணாமலையையும் அவர் விட்டுவைக்கவில்லை.

“இன்னொருவர் புதிதாக வந்துள்ளார். அவர் அதிமுகவை ஒழிக்கிறேன் என்கிறார். அதிமுக தெய்வத்தால் உருவாக்கப்பட்ட கட்சி. ஆணவத்தால் பேசக்கூடாது. 1998இல் ஊர் ஊராக தாமரை சின்னத்தை கொண்டு சேர்த்தது அதிமுகதான்.

“நீங்கள் எல்லாம் நியமனம் செய்யப்பட்டவர்கள். உங்களை எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம். டெல்லியில் இருப்பவர்கள் நினைத்தால்தான் நீங்கள் தலைவராக இருக்க முடியும். கொஞ்சம் கவனத்துடன் பேசுங்கள்.

“அண்ணாமலை புளுகுமூட்டையை அவிழ்த்துவிடுகிறார். ஒரு கவுன்சிலராக முடியவில்லை. நீங்கள் வந்து அதிமுகவை ஒழிக்க முடியுமா? பதவி வரும்போது பணிவு வரவேண்டும். அது உங்களிடம் இல்லை. தலைக்கனத்தில் ஆடக்கூடாது. மரியாதை கொடுத்தால்தான் மனிதராகப் பிறந்தவருக்கு மரியாதை,” என்று இபிஎஸ் கடுமையாகச் சாடினார்.

வாரிசு அரசியலை ஒழிப்பேன் என்று கூறும் இந்தியப் பிரதமர் மோடி, ஆனால் செயலில் அவ்வாறு நடந்துகொள்வதில்லை என்றும் அவர் சொன்னார்.

“வாரிசு அரசியலை ஒழிப்பேன் என்கிறார் பிரதமர். அவருடைய கூட்டணியில் உள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாரிசு அரசியல்படி வந்தவர்தான்.

“கூட்டணி வைத்தபிறகு இட ஒதுக்கீடு குறித்துக் கெஞ்சி கேட்டதாக அன்புமணி கூறுகிறார். நான் முதலமைச்சராக இருந்தபோது சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த அரசாணை வெளியிடப்பட்டது. இப்போது, சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த மாட்டோம் என்று கூறும் பாஜகவுடன் அவர் சேர்ந்துள்ளார்,” என்றார் இபிஎஸ்.

நாடாளுமன்றத் தேர்தலில் 32 தொகுதிகளில் அதிமுக தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. தேமுதிகவிற்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய சமூக ஜனநாயகக் கட்சியும் (எஸ்டிபிஐ) புதிய தமிழகம் கட்சியும் தலா ஒரு தொகுதியில் போட்டியிடுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!