சென்னை: தமிழகத்தின் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு சென்னை வானிலை நிலையம், அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது. இதன் எதிரொலியாக, மே 25, 26ஆம் தேதிகளில் இரு மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக்கூடும் என சென்னை வானிலை நிலையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல், தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களுக்கு மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், கன்னியாகுமரி, திருப்பூர், நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த இரு நாள்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாநகரின் சில பகுதிகளில் மட்டும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு நிலையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
இதையடுத்து, தமிழகக் கடலோரப்பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, தென்தமிழகம், மன்னார் வளைகுடா, குமரி கடலோரப் பகுதிகள் மே 27ஆம் தேதிவரை, மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில், சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அரபிக்கடலில் உருவாகும் என எதிர்பார்க்கப்படும் புயலுக்கு ‘சக்தி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக, மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்திய வானிலை நிலையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

