இந்தியாவின் 'நீட்' மருத்துவ நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாகக் கூறப்படும் உதித்சூர்யாவின் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்ய தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளதாக போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலர் இதுபோல ஆள்மாறாட்டம் செய்திருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. சென்னையைச் சேர்ந்த வெங்கடேசன் அங்குள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். அவருடைய19 வயது மகன் உதித்சூர்யா, இவ்வாண்டு 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றதாக தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் இளங்கலை மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். இந்நிலையில், மாணவர் உதித்சூர்யா 'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளதாகக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரனுக்கு மின்னஞ்சல் மூலம் புகார் கிடைத்தது. அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், ஆள்மாறாட்டம் செய்தது உறுதி செய்யப்பட்டதால் கல்லூரி முதல்வர் போலிசில் புகார் செய்தார். இந்த வழக்கில் பெற்றோருடன் சேர்ந்து தலைமறைவாகியிருக்கும் உதித்சூர்யாவைத் தனிப்படை போலிசார் தேடி வருகின்றனர். இந்த ஆள்மாறாட்டத்தில் மருத்துவத்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் கல்லூரி முதல்வர், துணை முதல்வர், பேராசிரியர்கள் ஆகியோரிடம் தனிப்படை போலிசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம்: வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்
1 mins read
பெற்றோருடன் சேர்ந்து தலைமறைவாகியிருக்கும் உதித்சூர்யாவை 'நீட்' தேர்வு ஆள்மாறாட்ட வழக்கின் தொடர்பில் தனிப்படை போலிசார் தேடி வருகின்றனர். படம்: ஊடகம் -
குறிப்புச் சொற்கள்

