‘வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க மேலும் 127 விமானச் சேவைகள்’

கொவிட்-19 நெருக்கடி காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை தாயகத்துக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் உறுதியாக இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதன் தொடர்பில் ஆகஸ்ட் 5 முதல் 31 வரை தமிழகத்துக்கு 127 விமானச் சேவைகள் இயக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. கால அட்டவணைப்படி விமானங்கள் உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

வெளிநாட்டில் உள்ள தமிழர்களை மீட்டு வர ஜூன் 6 முதல் ஜூலை 20 வரை 101 விமானங்கள் இயக்கப்பட்டதாகவும், கடந்த 20ம் தேதி முதல் ஆகஸ்ட் 5 வரை 58 விமானங்கள் இயக்கப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள், விமானங்கள் மூலம் தமிழகத்தில் தரையிறங்க அனுமதி கோரி திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் மற்றும் ராஜா முகமது ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

அந்த மனுவின் மீதான விசாரணையின்போது இந்தத் தகவல்கள் வெளியாகின.