வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கு திரும்பியவர்கள் தனிமைப்படுத்தப்படவில்லை; விமான நிலையத்திலேயே இ-பாஸ்

1 mins read
5e5d1517-33aa-4a68-b4fe-f1ccd0ed2f8a
வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர். படம்: இந்திய ஊடகம் -

கொரோனா கிருமிப் பரவல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானங்கள் மூலம் திரும்புவோருக்கான தனிமைப்படுத்தப்படுதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சிறப்பு விமானங்களின் மூலம் வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படுவோர் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு முகாம்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

வெளிநாடுகளில் இருந்து புறப்படுவதற்கு 4 நாட்களுக்கு முன்பு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து தொற்று இல்லை என்ற சான்றிதழ்களுடன் வருபவர்கள் நேரடியாக வீடுகளுக்கு சென்று தனிமைப்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இந்த விதிமுறைகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை.

இந்நிலையில், மத்திய அரசின் தளர்வுகளுடன் கூடிய தனிமைப்படுத்துதல் திட்டம் நேற்று முதல் சென்னை விமான நிலையத்தில் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதன்மூலம் வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானங்களில் வருபவர்கள் முகாம்களில் தனிமைப்படுத்தும் முறை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

நேற்று குவைத்தில் இருந்து வந்த சிறப்பு விமானத்தில் பயணம் செய்த 134 பயணிகளில், ஏற்கெனவே பரிசோதித்து மருத்துவ சான்றிதழ்களைக் கொண்டு வந்தவர்களை, வீடுகளுக்கு சென்று தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

சான்றிதழ்கள் இல்லாமல் வந்தவர்களுக்கு சென்னை விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர்.

விமான நிலையத்திலேயே அனைவருக்கும் இ-பாஸ்கள் வழங்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்