தீபாவளிக்கு இன்னும் 10 தினங்களே உள்ள நிலையில், காரைக்குடி பருத்தி கண்டாங்கி சேலை விற்பனை சூடுபிடித்துள்ளதாக காரைக்குடி நெசவாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இந்த நெசவாளர்கள் கையால் உருவாகும் கண்டாங்கி சேலைகளுக்குக் கடந்தாண்டு புவிசார் குறியீடு கிடைத்ததை அடுத்து, தமிழக மக்கள் மத்தியில் இதன் மீதான மவுசு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, காரைக்குடி கானாடுகாத்தான் பகுதியைச் சேர்ந்த நெசவாளர் வெங்கட்ராமன் கூறுகையில், "தனித்துவம் மிக்க காரைக்குடி கண்டாங்கி சேலை களைக் இணையம் வழியாகவும் விற்பனை செய்கிறோம்.
"கொரோனா பொது முடக்கத் தால் எங்கள் தொழில் முடங்கி இருந்தாலும் இப்போது தீபாவளி பண்டிகைக்கான உற்பத்தியும் விற்பனையும் ஆரம்பித்த பிறகு நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறோம்.
"இந்த சேலைகள் ஆரம்பத்தில் எடை அதிகமாக இருக்கும். தற்போது இந்தக் காலப் பெண்களுக்கு ஏற்றார்போல் எடை குறைவான சேலைகளை உற்பத்தி செய்கிறோம்.
"தற்போது தீபாவளிக்கு பாரம்பரிய வடிவமைப்புடன் கூடிய செட்டிநாடு தாழம்பூ கோர்வை கரையை விரும்பி வாங்குகின்றனர். அதேபோல் பாலும் பழமும், தேன் நிலவு, ஆட்டு விழி, கோட்டையூரான் கண்டாங்கியும் விரும்பப்படுகிறது.
"ஊசி வாழை, எந்த ஒரு அலங்காரமும் இல்லாத பார்டருடன் கூடிய வடிவமைப்புகளை இளம் பெண்கள் அதிகம் விரும்புகின்றனர். இந்த ரகம் மிகவும் லேசாக இருப்பதால் அவர்களுக்குப் பிடிக்கிறது. கட்டும்போது பூப்போல இருக்கும். கொரோனா தொய்விற்குப் பின்னர் தற்போது அதிகமானோரின் ஆர்டர் கிடைத்துள்ளது," என்று வெங்கட்ராமன் கூறினார்.

