300,000 பேருக்கு 10% தீபாவளி போனஸ்

300,000 பேருக்கு 10% தீபாவளி போனஸ்

2 mins read
f7a58f19-1d7d-4319-8cf3-32ee289309ab
படம்: ஊடகம் -

சென்னை: தீபாவளி பண்டிகை வரும் 14ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளதை ஒட்டி ஏறக்குறைய மூன்று லட்சம் பொதுத்துறை ஊழியர்களுக்கு 10% போனசை வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆண்டுதோறும் வழங்கப்படுவதைப் போன்றே இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்கு ஏதுவாக போனஸ் அறிவிப்பை அரசு அறிவித்துள்ளது.

தமிழக பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 96 ஆயிரத்து 975 தொழிலாளர் களுக்கு 210 கோடியே 48 லட்சம் ரூபாய் போனசும் கருணைத் தொகையும் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டுகளில் 20% வரை போனஸ் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கொரோனா கிருமித்தொற்றின் பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு, நிதிச்சுமையைக் கருத்தில் கொண்டு 10% மட்டுமே வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "அரசு போக்குவரத்துக் கழகங்கள், மின் உற்பத்தி பணியாளர்கள், நுகர்பொருள் வாணிபக் கழகம், தேயிலை தோட்டக் கழக ஊழியர்கள் உட்பட ஏறக்குறைய மூன்று லட்சம் ஊழியர்கள் இவ்வாண்டு பயனடைய உள்ளனர்.

"அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளியை ஒட்டி 8.33 % போனசும் 1.67% கருணைத்தொகையும் என ஆகமொத்தம் 10% போனசாகக் கிடைக்கும்," என தெரிவித்துள்ளது.

அதேபோல நிரந்தர தொழிலாளர்கள் போனஸ், கருணைத்தொகையாக ரூ.8,400 பெறுவர் எனவும் அரசு அறிவித்துள்ளது.

இதற்கிடையே, "இப்போது வழங்குவது கடந்த ஆண்டு அளித்த போனஸில் பாதிதான். எனவே, தொழிலாளர்களுக்குக் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் 20% போனசை தமிழக அரசு வழங்கவேண்டும்," என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்