தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின்போது தமிழகம் முழுவதும் 106 இடங்களில் தீவிபத்து நிகழ்ந்ததாக மாநில தீயணைப்புத் துறை தெரிவித்து உள்ளது.
வான் நோக்கி பாய்ந்து செல்லக்கூடிய ராக்கெட் வெடியால் 84 இடங்களிலும் இதர வகை பட்டாசுகளை வெடித்ததன் மூலம் 22 இடங்களிலும் தீப்பிடித்து எரிந்ததாக அதன் அறிக்கை கூறியது.
சென்னையில் மட்டும் 40 இடங்களில் பட்டாசுகளால் தீ விபத்துகள் நிகழ்ந்தன. இவற்றில் ராக்கெட் வெடியால் நிகழ்ந்த விபத்துகளின் எண்ணிக்கை 33.
மாநிலம் முழுவதும் நிகழ்ந்த தீ விபத்துகளில் 90 விழுக்காடு இரவு 7 மணிக்கும் 10 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஏற்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தீ விபத்துகளில் மதுரை துணிக்கடையில் ஏற்பட்டதே பெரி யதாகும். மதுரை தெற்கு மாசி வீதியில் பாபுலால் என்பவருக்குச் சொந்தமான துணிக்கடை உள்ளது. இங்கு மேல் மாடியில் துணிக்கடை கிடங்கு உள்ளது. இந்தக் கடையில் தீபாவளியன்று அதி காலை நேரத்தில் திடீரென தீப்பிடித்தது.
உடனடியாக மீனாட்சி அம்மன் கோயில் தீயணைப்புத் துறையினர், பெரியார் பேருந்து நிலையத் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்தக் கட்டடம் நூற்றாண்டைக் கடந்த பழைய கட்டடம் என்று கூறப்படுகிறது.
தீயணைப்பு வீரர்கள் கட்டடத்தின் உட்பகுதியில் தீயை அணைத்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாகக் கட்டடத்தின் உட்பகுதி சாளரம் திடீரென இடிந்து விழுந்தது.
இதில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி, கல்யாணகுமார், சின்னக்கருப்பு ஆகியோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
உடனடியாக அவர்களைச் சகவீரர்கள் மீட்டனர். இதில் சிவராஜன், 39, கிருஷ்ணமூர்த்தி, 30, ஆகிய இருவரும் உயிரிழந்தனர். படுகாயமடைந்த கல்யாணகுமார், சின்னக்கருப்பு ஆகிய இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

