முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் கஜானாவை சுரண்டிய இரட்டையர்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
திமுகவை ஊழல் கட்சி என மத்திய அமைச்சர் அமித் ஷா சாடியிருப்பதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவுக்கு எதிரான சூழ்ச்சிகள் அனைத்தும் முறியடிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
எத்தனை வித்தைகள் செய்தாலும் 2021 தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணிக்கு மக்கள் பலமான அடியை வழங்குவார்கள் என்று தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், வாரிசு அரசியல் குறித்து அமித் ஷா விமர்சனம் செய்திருப்பது கண்ணாடி முன் நின்று கரடி பொம்மை விலை கேட்ட நகைச்சுவை போன்று உள்ளதாக கூறியுள்ளார்.
"தமிழக அரசின் கஜானாவை சுரண்டிய இரட்டையர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகள் மீது ஊழல் புகார் கூறுவதா?" என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கிடையே, நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றிருந்த போது, தமிழகத்துக்கு கொண்டுவந்த திட்டங்களை பட்டியலிட திமுக தயாரா? என சவால் விடுத்திருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள திமுக எம்பி டி.ஆர்.பாலு, திமுகவின் சாதனைப் பட்டியலைச் சொல்ல வேண்டும் என்றால், நேருக்கு நேர் மேடை அமைத்து, அமித் ஷா கூறியிருப்பது போல் தெருதோறும் கூட்டம் போட்டுப் பேச திமுகவால் முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் திமுக முயற்சியால் செயல்படுத்தப்பட்ட திட்டங்களைப் பட்டியலிட்டுள்ளார்.

