ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக தெரிவித்துள்ள துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், "அரசியலில் எதுவும் நடக்கலாம். வரும் காலத்தில் சூழ்நிலைக்ேகற்ப ரஜினியுடன் கூட்டணி அமைக்கவும் வாய்ப்புள்ளது," என்று கூறியுள்ளார்.
ரஜினி கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு தோதாக இப்போதே அச்சாரம் போடும் வகையில் துணை முதல்வர் கருத்துகளைப் பகிர்ந்துள்ளது, அரசியல் வட்டாரத் தில் பரபரப்பைக் கூட்டியுள்ளது.
சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள சூழலில், அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில், ஜனவரி மாதம் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதாகவும் டிசம்பர் 31ல் இதுகுறித்த அறிவிப்பு வெளி யாகும் என்றும் ரஜினிகாந்த்தும் அறிவித்துள்ளதால் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், "ரஜினிகாந்த்தின் அரசியல் வரவு நல்வரவாகட்டும். வரும்காலத்தில் ரஜினியுடன் கூட்டணி அமைய வாய்ப்புள்ளது," என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
ரஜினியின் நேர்காணலை இன்னும் நான் பார்க்கவில்லை. ரஜினிகாந்த் கட்சி தொடர்பாக அறிக்கை வெளியிட்ட பிறகு அதைப் படித்துவிட்டு கருத்து சொல்கிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இந்நிலையில், ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா அளித்த பேட்டியில், "ரஜினிக்கு இம்மாதம் 12ஆம் தேதி பிறந்தநாள் வருகிறது. அதற்கு முன்பாகவே தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை ரஜினிகாந்த் அறிவிப்பார்," என்று கூறியுள்ளார்.
"ரஜினி கட்சி தொடங்குவதால் அதிமுகவுக்கும் அதன் வாக்கு வங்கிக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை," என்று அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.

