அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தா மரணம்

புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவரும் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவருமான டாக்டர் வி.சாந்தா, 93 இன்று காலமானார். 

இதயநோய் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் மூச்சுத்திணறலால் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

புற்றுநோயியல் துறையில் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட டாக்டர் சாந்தா, 1955ஆம் ஆண்டு முதல் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சேவையாற்றி வந்தார்.

அங்கேயே ஒரு சிறிய அறையில் தங்கி, எளிமையுடன் வாழ்ந்து வந்த இவர், புற்றுநோயாளிகளுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான மருத்துவச் சேவை கிடைக்கும்படி செய்தார்.

புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியிலும் அதற்குச் சிகிச்சை அளிப்பதிலும் உலகப் புகழ்பெற்ற மருத்துவராகத் திகழ்ந்த சாந்தா, தன்னலமற்ற மருத்துவ சேவைக்காக பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண், மகசேசே உள்ளிட்ட ஏராளமான விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.

டாக்டர் சாந்தாவின் மறைவிற்குத் தமது டவிட்டர் பக்கம் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

“புற்றுநோய்க்கு முதல்தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்ய அரும்பெரும் முயற்சிகளை மேற்கொண்ட டாக்டர் சாந்தா என்றென்றும் நினைவில் இருப்பார். ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் சேவை ஆற்றுவதில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை முன்னணியில் இருக்கிறது. கடந்த 2018ஆம் ஆண்டு அந்த மருத்துவமனைக்குச் சென்று வந்ததை நினைவுகூர்கிறேன்,” என்று திரு மோடி பதிவிட்டுள்ளார்.

டாக்டர் சாந்தாவின் இறப்பு, ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

“மனித குலத்தில் பிறந்த மரகதமணி போன்ற மருத்துவர் ஒருவரை, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கானவர்களை அன்புடன் கவனித்துக் குணமாக்கிய மனித நேயக் காவலரை இன்றைக்கு மருத்துவத் துறை இழந்துவிட்டது. அவரது மறைவால் வாடும் அடையாறு மருத்துவமனை ஊழியர்களுக்கு ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் வைக்கப்பட்ட டாக்டர் சாந்தாவின் உடல், காவல்துறை மரியாதையுடன் மாலை 5 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon