குமரி: தமிழகத்திலிருந்து வருபவர்கள் மூலம் கேரளாவில் கிருமித்தொற்று பரவி விடக்கூடாது என்பதற்காக இரு மாநில எல்லைப் பகுதியில் உள்ள சாலைகளை கேரள அரசு மூடியுள்ளது.
சாலைகளில் மணலைக் கொட்டி தடுப்பரண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால் இருசக்கர வாகனங்களில்கூட கேரளாவுக்குள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த கடும் நிபந்தனைகளுடன் கூடிய ஊரடங்கு கடந்த சில தினங்களாக அமலில் உள்ளது. இந்த முத்தடுப்பு ஊரடங்கின் மூலம் நல்ல பலன் கிடைக்கும் என அம்மாநில அரசு எதிர்பார்க்கிறது.
இத்தகைய சூழ்நிலையில் தமிழகத்தில் இருந்து யாரும் கேரளாவுக்குள் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக அம்மாநில போலிசார் குமரி மாவட்டத்தை ஒட்டிய எல்லைப்பகுதிகளில் உள்ள சாலைகளை மூடியுள்ளனர்.
இதற்காக சாலைகளில் பெரும் குவியலாக மணல் கொட்டப்பட்டுள்ளது. இதனால் சில தமிழக கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டது போன்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இரு மாநிலங்களையும் இணைக்கும் சிறிய சாலைகளில்கூட தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இருதரப்பிலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 'தினகரன்' நாளேட்டின் இணையதளச் செய்தி தெரிவிக்கிறது.

