தமிழகத்தில் கொரோனா உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை
சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம் 105 பேர் மட்டுமே கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும், நேற்றுமுன்தினம் தொற்றுப் பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் 39 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நேற்று முன்தினம் 265 பேர் தொற்றுப் பாதிப்பில் இருந்து முழுமையாகக் குணம் அடைந்துள்ளனர். இதற்கிடையே தமிழகத்தில் 13.3 மில்லியன் பேர் இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மேகதாது விவகாரம்: விவசாயிகள் நூறு நாள் உண்ணாவிரதப் போராட்டம்
திருச்சி: மேகதாதுவில் புதிய அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து, தமிழக, கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் நூறு நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளதாக தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக் கண்ணு தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கும் நோக்கத்தில் பாஜக தமிழகத்தை பலிகொடுத்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறி உள்ளார். மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்பதை வலியு றுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
காட்டுத் தீயால் அரிய வகை உயிரினங்கள் இறந்திருக்க வாய்ப்பு
திண்டுக்கல்: மூன்றாவது நாளாக நீடிக்கும் காட்டுத் தீ காரணமாக கொடைக்கானலின் கூக்கால் வனப்பகுதியில் உள்ள அரிய வகை உயிரினங்கள் இறந்திருக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. பெருமாள் மலைப் பகுதியில் காட்டுத் தீயை அணைப்பதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள புலிகள் சரணாலயத்துக்கு அருகே உள்ள பகுதி வரை காட்டுத் தீ பரவியுள்ளதால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
ஆம்புலன்ஸ் வாகனத்தில் போதைப் பொருள் கடத்தல்: மாணவர்கள் கைது
நீலகிரி: ஆம்புலன்ஸ் வாகனத்தில் போதைப் பொருள்களைக் கடத்தி வந்த கல்லூரி மாணவர்கள் உட்பட நால்வரை நீலகிரி காவல்துறையினர் கைது செய்தனர். நேற்று முன்தினம் இரவு குன்னூர் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் வாகனங்கள் சோதனையிடப்பட்டன. அப்போது அவ்வழியே வந்த ஆம்புலன்சை நிறுத்துமாறு காவலர்கள் கை காட்டியபோதும் அது நிற்காமல் சென்றது. இரண்டு சோதனைச் சாவடிகளில் நிற்காமல் சென்ற அந்த வாக னத்தை ஊட்டி, கூடலூர் சாலையில் மடக்கிப்பிடித்து காவலர் கள் சோதனையிட்டனர். அப்போது 3.5 கிலோ எடையுள்ள போதைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்த மூன்று கல்லூரி மாணவர்கள் உட்பட நான்கு பேர் கைதாகினர்.

