சென்னை: தமிழகத்தில் 87 விழுக்காடு மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
எனவே எத்தகைய கிருமித் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும் யாரும் கவலைப்படத் தேவையில்லை என்று அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற 23 மெகா தடுப்பூசி முகாம்களின் மூலம் சுமார் 38 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
"தமிழகத்தில் நூறு மில்லியனுக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. எனவே தொற்று எண்ணிக்கை தற்போது மளமளவென சரிந்து வருகிறது. இனி எத்தகைய கிருமித் தாக்குதலையும் சமாளிக்க இயலும். கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களிலும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் கொரோனாவின் வேகம் இன்னும் வீரியத்துடன் உள்ளது. அதனால், இன்னும் ஓரிரு மாதங்கள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டியது அவசியம்," என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

