செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
039c2afa-58e3-43bb-8f37-3b56bc2a3302
-

பாஜக பிரமுகர் எச்.ராஜா கைது

திண்டுக்கல்: காவல்துறையின் அனுமதி பெறாமல் நடப்பதாக இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் பழநி இடும்பன் குளம் பகுதியில் அக்குறிப்பிட்ட நிகழ்ச்சி நடப்பதாக இருந்தது. இதற்காக அங்கு காரில் சென்று கொண்டிருந்த எச்.ராஜாவை காவல்துறையினர் வழியிலேயே தடுத்து நிறுத்தி திரும்பிச் செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால், அதற்கு ஒப்புக்கொள்ளாத அவர், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவர் கைதானார்.

இன்ஸ்டகிராமில் ஆபாசப் படங்களை வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

சென்னை: சிறுவர், சிறுமியரின் ஆபாசப் படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்ட கல்லூரி மாணவரை சென்னை காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த 2019ஆம் ஆண்டு 11ஆம் வகுப்பு படித்தபோதே அவர் இந்த தகாத செயலில் ஈடுபட்டுள்ளார். இதை அண்மையில் கண்டுபிடித்த தொண்டு நிறுவனம் ஒன்று, அந்த மாணவர் மீது புகார் அளித்தது. அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது அந்த மாணவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைதானார்.

திருவள்ளூரில் 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அம்மன் சிலை கண்டெடுப்பு

திருவள்ளூர்: 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அம்மன் சிலை ஒன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கலியனூர் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கைலாசநாதர் கோயில் குளத்தில் பள்ளம் தோண்டும் பணியின்போது இச்சிலை புதைந்து கிடப்பது தெரியவந்தது. இத்தகைய சிலைகளை பல்லவர்கள் காலத்தில் செல்வத்திற்காகவும் வளத்திற்காகவும் நீர்நிலைகளில் வைத்து மக்கள் வழிபட்டு வந்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே கலியனூர் கிராம மக்கள் தாங்கள் கண்டெடுத்த சிலையை பயபக்தியுடன் கும்பிட்டு பூசை செய்தனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: முழு விசாரணை அறிக்கை தாக்கல்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் போராட்டம் நடைபெற்றபோது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 13 பேர் இறந்தனர். இதுகுறித்து ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நேற்று முன்தினம் 3,000 பக்கங்கள் கொண்ட முழுமையான விசாரணை அறிக்கையை நீதிபதி அருணா ஜெகதீசன், முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்தார். இந்த விசாரணை அறிக்கை ஐந்து பாகங்களைக் கொண்டதாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், 1,500 காணொளி ஆவணங்கள், 1,250 சாட்சிகள், 1,500 காவல்துறையினரிடம் நடத்திய விசாரணை தொடர்பான தகவல்கள் விசாரணை அறிக்கையின் ஐந்தாம் பாகத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணை வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்றதாகவும் நீதிபதி அருணா ஜெகதீசன் கூறினார்.