கள்ளக்குறிச்சி: தனியார் பள்ளியில் படித்து வந்த 4,000 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிடாமல் தடுக்கும் வகையில், சூறையாடப்பட்ட பள்ளியை மீண்டும் திறப்பதற்கு ஏற்பாடுகள் நடந்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக 9, 10, 12ஆம் வகுப்புகளுக்கான பாடங்கள் வேறு ஒரு தனியார் பள்ளியில் நடத்தப்பட உள்ளதாகவும் இரண்டு மாவட்டக் கல்வி அதிகாரிகள் மேற்பார்வையில் வகுப்புகள் விரைவில் தொடங்கும் என்றும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
இதனிடையே, கள்ளக்குறிச்சி கலவர வழக்கை விசாரிக்க 18 பேர் கொண்ட சிறப்புப் புலனாய் வுக்குழுவை அமைத்து காவல் துறைத் தலைவர் டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
அண்மைய கலவரத்தை அடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஸ்ரீதர் மாற்றப்பட்டார். புதிய ஆட்சியராக ஸ்வரன்குமார் ஜடாவத் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். "தவறான வதந்தியை மக்கள் பரப்பக் கூடாது," என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

